பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேற்றப்படும் தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடிநீர் மாசுபட்டுவிட்டது கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு


பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேற்றப்படும் தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடிநீர் மாசுபட்டுவிட்டது கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு
x
தினத்தந்தி 8 May 2018 3:48 AM IST (Updated: 8 May 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேற்றப்படும் தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபட்டு விட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

பெருந்துறை சிப்காட் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாசுபடிந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டர் பிரபாகரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் தற்போது 200-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளும், 14 தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், இரும்பு ஆலை, டயர் புதுப்பிக்கும் ஆலை என நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து பலதரப்பட்ட கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகின்றன. இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

கழிவுநீர் ஆங்காங்கே தேங்குவதால் புற்றுநோய், மலேரியா, சிக்கன்குனியா போன்ற பல்வேறு நோய்களும் பரவி வருகிறது. மேலும் சாய ஆலை மற்றும் டயர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றும் மாசுபட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

செல்போன் கோபுரம்

கவுந்தப்பாடி அருகே உள்ள கோவில்பாளையம் புதுக்காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். தற்போது நாங்கள் குடியிருக்கும் பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இங்கு செல்போன் கோபுரம் அமைத்தால் கர்ப்பிணி பெண்கள், 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் புற்றுநோய், மூளைபாதிப்பு, வலிப்புநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

ஆக்கிரமிப்பு

கோபி இந்திராபுரம் புதுக்காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 1990-ம் ஆண்டு இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. மேலும் எங்கள் பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் கோவில் கட்டி ஆண்டுதோறும் நாங்கள் திருவிழா நடத்தி வருகிறோம்.

தற்போது சிலர் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இதனால் கோவில் முன்பு பொங்கல் வைக்க முடியால் சிரமப்பட்டு வருகிறோம். எனவே கோவில் முன்பு உள்ள புறம்போக்கு இடத்தை மீட்டு எங்களுக்கு தரவேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

சாக்கடை வடிகால் வசதி

மேட்டுநாசுவம்பாளையம் என்.எம்.எஸ். வீதி, பட்டத்து அரசி அம்மன் கோவில் வீதி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். போதிய சாக்கடை வடிகால் வசதி இல்லாததால் எங்கள் பகுதியில் சாக்கடை கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

சென்னிமலை ஜீவா கைத்தறி சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் சங்க தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று கூறி இருந்தனர். இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 226 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள். 

Next Story