தினக்கூலி பணியாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்


தினக்கூலி பணியாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 May 2018 4:30 AM IST (Updated: 8 May 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தினக்கூலி பணியாளர்கள் 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை தொழிலாளர் சங்கம் சார்பில், நீலகிரியில் தோட்டக்கலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. பூங்காவின் உள்பகுதியில் உள்ள புல்வெளியில் அமர்ந்து பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்ரமணியம் ஆகியோர் தினக்கூலி பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் போஜராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பெள்ளி உள்ளிட்டோருடன் பூங்கா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடத்தி விட்டு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பணியாளர்களுக்கு தினக் கூலி தற்போது ரூ.250 வழங்கப்படுகிறது. இந்த தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கலெக்டரிடம் தெரிவித்தோம். பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும், சம்பள உயர்வு வழங்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்து உள்ளேன் என்று கலெக்டர் தெரிவித்தார். 4 நாட்களாக எங்களது போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவில்லை. தோட்டக்கலை உயர் அதிகாரிகள் கோத்தகிரியில் நடந்த விழாவுக்கு வந்து சென்று உள்ளனர். எனவே, பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தெரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கடந்த ஆண்டு மலர் கண்காட்சியில் கலந்துகொண்ட தோட்டக்கலை அதிகாரிகளிடம் பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி கோரிக்கை மனுவை பணியாளர்கள் அளிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, உடனடியாக சம்பள உயர்வு வழங்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும்.

இதற்கிடையே ஊட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ் தாவரவியல் பூங்காவுக்கு வந்து தினக்கூலி பணியாளர்களுடன் அமர்ந்து தனது ஆதரவை தெரிவித்தார். அவர்களிடம் பேசும்போது, பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசி உள்ளேன். தற்போது உங்களது பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளேன். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தின் போது உடல்நிலை அதிகமாக பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் பூங்காவுக்குள் பேச்சுவார்த்தைக்காக வரும்போது, போராட்டத்தில் ஈடுபட்ட தினக்கூலி பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story