பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீராமுலுவை ஆதரித்து முலகால்மூரு தொகுதியில் நடிகர் சுதீப் பிரசாரம்


பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீராமுலுவை ஆதரித்து முலகால்மூரு தொகுதியில் நடிகர் சுதீப் பிரசாரம்
x
தினத்தந்தி 8 May 2018 4:31 AM IST (Updated: 8 May 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீராமுலுவை ஆதரித்து முலகால்மூரு தொகுதியில் நடிகர் சுதீப் பிரசாரம் மேற்கொண்டார்.

சிக்கமகளூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சி உள்ள நிலையில், கர்நாடக தேர்தல் களம் அனல் பறக்கிறது. பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மத்திய மந்திரிகள், மூத்த தலைவர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரபல நடிகர் சுதீப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் சுதீப் நேற்று பல்லாரியில் பா.ஜனதா வேட்பாளர் சோமசேகர ரெட்டியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் காரில், சித்ரதுர்கா மாவட்டம் முலகால்மூரு தொகுதிக்குட்பட்ட ஓபலாபுரா கிராமத்துக்கு வந்தார். அங்கு அவர் பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீராமுலுவை ஆதரித்து காரில் சென்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நடிகர் சுதீப்பை பார்க்க அவருடைய ரசிகர்களும், பா.ஜனதா தொண்டர்களும் என ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள். தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை பார்த்து சுதீப், கையசைத்தார். பின்னர் அவர், தொண்டர்கள் மத்தியில் முலகால்மூரு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீராமுலுவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூட்டத்தினரை பார்த்து கேட்டுக் கொண்டார். இதையடுத்து நடிகர் சுதீப் அங்கிருந்து சென்றுவிட்டார்.

முன்னதாக நடிகர் சுதீப், ஓபலாபுரா பகுதியில் உள்ள ராதா என்பவருக்கு சொந்தமான டீக்கடையில், டீ குடித்தார். அப்போது நடிகர் சுதீப், ராதாவிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்து ‘உங்கள் மகளின் படிப்பு செலவுக்காக வைத்து கொள்ளுங்கள்’ என்று கூறினார். ஆனால் முதலில் ராதா அந்த பணத்தை வாங்க மறுத்தார்.

அப்போது சுதீப், ‘தேர்தலில் பா.ஜனதாவுக்காக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இந்த பணத்தை நான் கொடுக்கவில்லை. உங்களின் மகளுக்காக எனது அன்பு பரிசாக வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார். இதையடுத்து ராதா சுதீப்பிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டார்.

Next Story