ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிப்புகள்


ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிப்புகள்
x
தினத்தந்தி 8 May 2018 4:50 AM IST (Updated: 8 May 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து வகையான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், லோக் ஆயுக்தாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும், கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதத்திற்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என ஜனதாதளம் (எஸ்) கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பெங்களூருவில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி மற்றும் கட்சி தலைவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அனைத்து வகையான விவசாய கடனும் 24 மணி நேரத்தில் தள்ளுபடி செய்யப்படும். அது மட்டுமின்றி மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன், நெசவாளர்களின் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். சிறிய டிராக்டர்கள் வாங்க 75 சதவீத மானியம் வழங்கப்படும். மாதம் ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவாக சம்பாதிக்கும் விவசாய தொழில் சாராத ஏழை பெண்களின் குடும்ப நிர்வாக செலவுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். உழைக்கும் பெண்களுக்காக பெங்களூருவில் 100 தங்கும் விடுதிகள் கட்டப்படும்.

மருத்துவ ஊழியர்களுக்கு (ஆஷா) வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.3,500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். வக்கீல்கள் சங்கத்திற்கு ரூ.100 கோடி நிதி உதவி மற்றும் புதிய வக்கீல்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரமும், 80 வயதை கடந்த முதியவர்களுக்கு ரூ.8 ஆயிரமும் வழங்கப்படும். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.

சேவை உரிமை சட்டம் இயற்றப்படும். அரசு துறைகளில் ஊழலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களில் மின்னணு முறையில் வழக்குப்பதிவு செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்படும். தேவை இல்லாமல் பொதுமக்களின் வாகனங்களை தடுக்க போலீசாருக்கு தடை விதிக்கப்படும். ஊழலை ஒழிக்க லோக்ஆயுக்தா அமைப்பு பலப்படுத்தப்படும். ஊழல் தடுப்புப்படை ரத்து செய்யப்படும்.

அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். சொத்துகளை அறிவிக்காவிட்டால் அது குற்றம் என்று கருதி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும். அரசு வாகனங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும். விவசாய உபகரணங்களை கொள்முதல் செய்ய ஊக்கத்தொகை வழங்கப்படும். சொட்டுநீர் பாசனத்திற்கு 90 சதவீத மானியம் வழங்கப்படும். விவசாய பம்புசெட்டுக்கு மின் இணைப்பு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விதைகளுக்கான மானியம் 60 சதவீதமாக உயர்த்தப்படும்.

மேலும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அனைத்து சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சாலை விதிமீறல்கள் கவனிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விகள் அறிமுகம் செய்யப்படும்.

* உயர்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவிகள் சாப்பிடும் வகையில் ஒவ்வொரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 3 மலிவுவிலை ஓட்டல்களும், மாவட்ட தலைநகரங்களில் தலா ஒரு மலிவுவிலை ஓட்டல்களும் அமைக்கப் படும்.

* கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்துக்கு முந்தைய 3 மாதங்களும், பிரசவத்துக்கு பிறகு 3 மாதங்கள் என 6 மாதங்கள் தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

* நீர்ப்பாசன திட்டங்களுக்காக ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

* கிடப்பில் போடப்பட்டுள்ள சிறிய நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும். 2 ஆண்டுகளில் பீமா அணையில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்படும்.

* கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களின் குடிநீருக்காக 60 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கொண்டு வரப்படும்.

* நீர்ப்பாசன பணிகளுக்கு மட்டும் 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கலபுரகியில் சோலார் மின் உற்பத்தி தொழிற்சாலை மேம்படுத்தப்படும்.

* 2020-ம் ஆண்டுக்குள் மின்மிகை மாநிலமாக கர்நாடகம் மாற்றப்படும்.

* காற்று, சூரியஒளியை பயன்படுத்தி 13 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவு மின்உற்பத்திரியை அதிகரிக்க நடவடிக்கை.

* அனல் மின்நிலையம், நீர்மின் நிலையம் மற்றும் சோலார் மின் உற்பத்தி மையங்களில் இருந்து மின்உற்பத்திரியை அதிகரிக்க நடவடிக்கை.

* 2021-ம் ஆண்டில் கிராமங்கள் உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் 24 மணிநேரமும் மின்சாரம் வினியோகிக்கப்படும்.

* சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் சுற்றுலாத்தலங்களின் வழிக்காட்டிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். மைசூரு, விஜயாப்புரா, ஹம்பி, தண்டோலி, பேளூர், கலபுரகி, சித்ரதுர்கா, கூடலுசங்கமா, சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்படும்.

* அரசு உதவியுடன் சுற்றுலாத்தலங்களில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

* நகரங்கள் உருவாக்கும் வகையில் மாநில நகரமயமாக்கல் ஆணையம் அமைக்கப்படும்.

* வகுப்பு-1 நகரங்களில் வார்டு கமிட்டிகள் அமைக்கப்படும்.

* ஆண்டுதோறும் 30 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்.

* அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதுடன், அவர்களுக்கான சுகாதார நலத்திட்டங்களும் கிடைக்க வழி செய்யப்படும்.

* கூலி தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படும்.

* நகர் மற்றும் கிராமப்புறங்களில் காற்று, சூரியஒளி மற்றும் ‘பயோ-கியாஸ்‘ ஆகியவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும். இதற்கு தேவையான செலவு தொகையில் 20 சதவீதத்தை அரசு வழங்கும்.

* குடும்ப தகராறு காரணமாக பாதிக்கப்படும் பெண்கள் ஒரு மாதம் தங்கிக்கொள்ளும் வகையில் ஒவ்வொரு தாலுகாக்களிலும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story