அக்காள் மகளை கொன்ற 2 பெண்கள் கைது


அக்காள் மகளை கொன்ற 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 8 May 2018 5:33 AM IST (Updated: 8 May 2018 5:33 AM IST)
t-max-icont-min-icon

அண்டாப்ஹில்லில் அக்காள் மகளை கொலை செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்தவர் சபிரா(வயது45). இவரது அக்காள் மகள் மெனாஸ்(17). மெனாசின் தாய் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். எனவே அவர், சித்தி சபிரா வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று மெனாஸ் மயங்கிய நிலையில் சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். மெனாஸ், குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக அவளது உறவினர்கள் டாக்டர்களிடம் கூறினர்.

இந்தநிலையில் டாக்டர்கள் இளம்பெண்ணை பரிசோதனை செய்த போது, அவள் ஏற்கனவே உயிரிழந்து இருந்தது தெரியவந்தது. மேலும் அவரது கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தன.

இதனால் சந்தேகமடைந்த டாக்டர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று மெனாசை தொழுகை செய்ய வருமாறு சித்தி சபிரா அழைத்துள்ளார். அதற்கு இளம்பெண் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது தங்கை சுவாலிகா(35) உடன் சேர்ந்து மெனாசை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, இளம்பெண்ணின் சித்தி சபிரா மற்றும் சுவாலிகாவை கைது செய்தனர்.

Next Story