உடலுக்கு வெளியே ஒன்றரை நாட்கள் உயிரோடிருந்த மூளை


உடலுக்கு வெளியே ஒன்றரை நாட்கள் உயிரோடிருந்த மூளை
x
தினத்தந்தி 8 May 2018 2:17 PM IST (Updated: 8 May 2018 2:17 PM IST)
t-max-icont-min-icon

‘காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா’ எனும் பிரபல சித்தர் பாடல் வரிகள், ‘உடல் என்பது உயிர் (பிராண வாயு உட்சென்று வெளிவரும் சுவாசம்) இருக்கும் வரை மட்டுமே பயனுள்ளது’ எனும் அறிவியல் உண்மையை வலியுறுத்துபவை.

நம் நுரையீரலின் செயல்பாடு மூலமாக உடலுக்குள் இழுக்கப்படும் பிராண வாயு (ஆக்சிஜன்) ரத்தத்தில் கலந்து, அந்த ரத்தமானது இதயத்தின் செயல்பாடு காரணமாக உடலின் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை’, முக்கியமாக மூளை முதல் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சென்று உடலின் உயிரணுக்கள் அனைத்தையும் செயல்படும் நிலையில் தொடர்ச்சியாக வைத்திருந்தால் மட்டுமே மனிதன் உயிரோடு இருப்பதாக அர்த்தம்.

அப்படி இல்லாமல், நோய்கள் அல்லது விபத்து களின் காரணமாக நுரையீரல் அல்லது இதய செயல்பாடு நின்று போனால் உடலுக்குத் தேவையான பிராண வாயு சுழற்சி நின்று போகும், பின்னர் அதன் விளைவாக மூளை செயலிழக்கும், அதனைத் தொடர்ந்து மூளைச் சாவு அல்லது மரணம் சம்பவிக்கும் என்பது அறிவியல் நியதி.

இதன் காரணமாகவே, இறந்த அல்லது இறக்கும் நிலையில் இருக்கும் ஒருவருடைய இதயம், நுரையீரல் உள்ளிட்ட பிறரின் உயிர் காக்கும் உடல் பாகங்களை சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்களுக்குள்ளாக உயிருள்ள நிலையில் சேகரித்து குறிப்பிட்ட பாகங்கள் செயலிழந்து உயிருக்காக போராடும் நோயாளிகளுக்கு பொருத்தி உயிர் பிழைக்கச் செய்கின்றனர் மருத்துவர்கள்.

ஆனால், ‘பன்றியின் உடல்களில் இருந்து துண்டிக்கப்பட்ட அவற்றின் மூளைகள், சுமார் 36 மணி நேரங்கள் வரை உயிரோடு வைக்கப்பட்ட அதிசயம்’ அமெரிக்காவிலுள்ள ஏல் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டது எனும் அறிவியல் செய்தி சமீபத்தில் வெளியாகி உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏல் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானி நேனாட் சேஸ்டன் தலைமையிலான ஆய்வுக்குழு மேற்கொண்ட ஒரு ஆய்வில், முதலில் 100 முதல் 200 பன்றிகளின் மூளைகள் கசாப்புக்கடையில் வாங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, பன்றிகளின் தலை துண்டிக்கப்பட்ட சுமார் 4 மணி நேரத்துக்குள்ளாக, குழாய்கள், வெப்பமூட்டிகள் (heaters) மற்றும் உடல் சூட்டுக்கு கொண்டுவரப்பட்ட செயற்கை ரத்தம் கொண்ட பைகள் ஒரு மருத்துவ அமைப்பின் உதவியுடன் பன்றிகளின் மூளைகளுக்கான ரத்த ஓட்டமானது மீண்டும் தொடங்கப்பட்டது.

அதன்பிறகுதான் அந்த அதிசயம் நடந்தது: உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட பன்றிகளின் மூளைகளில் உள்ள கோடிக்கணக்கான மூளை உயிரணுக்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்தது. ஆனாலும், பன்றியின் மூளைகளில் மின் செயல்பாடு (electrical activity) நிகழ்வதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அதாவது, கோமா நிலையில் உள்ள ஒரு மனித நோயாளியின் மூளையில் ‘மூளை அலைகள்’ (Brain waves) உற்பத்தி ஆகாததைப் போலவே, ரத்த ஓட்டம் மீட்கப்பட்ட பன்றியின் மூளைகளிலும் மூளை அலைகள் எதுவும் உற்பத்தியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, ரத்த ஓட்டம் மீட்கப்பட்ட பன்றியின் மூளைகளில் சுயநினைவு இல்லை என்று உறுதி செயப்பட்டது என்கிறார் விஞ்ஞானி சேஸ்டன். ஆனாலும், சுயநினைவு இல்லாமல் போனாலும் கூட, உயிருள்ள மூளை உயிரணுக்கள் கொண்ட அந்த பன்றி களின் மூளைகள் உயிரோடு இருக்கின்றன என்பதே உண்மை என்கிறார் நரம்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரான ஸ்டீவ் ஹைமன்.

அடிப்படையில், மனித மூளையின் நரம்புத் தொடர்புகளின் ‘மேப்’ அல்லது வரைபடம் ஒன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த பன்றி மூளை ஆய்வுத் திட்டம் (pig brain project) என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

மனித மூளையின் நரம்புத் தொடர்பு மேப் உருவாக்கப்பட்டால் மூளையைப் பாதிக்கும் நோய்களான ‘ஆட்டிசம்’ தொடங்கி மூப்படைதல் வரை பல உயிரியல் நிகழ்வுகளை புரிந்துகொள்ளவும்,

முக்கியமாக மிகவும் மேம்படுத்தப்பட்ட மூளை-கம்ப்யூட்டர் இடைமுக கருவிகளை உருவாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக, ரத்த ஓட்டம் மீட்கப்பட்ட பன்றிகளின் மூளைகள் புற்றுநோய் அல்லது அல்செய்மர் நோய்க்கான பரிசோதனை சிகிச்சைகளை (experimental treatments) பரி சோதித்துப் பார்க்க பெரிதும் உதவியாக இருக்கும் என்கிறார் விஞ்ஞானி சேஸ்டன்.

தற்போது பன்றிகளின் மூளை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வு எதிர்காலத்தில் மனித குரங்குகள் உள்ளிட்ட பிற உயிரினங்கள் கொண்டும் மேற்கொள்ளப்படலாம் என்கிறார் சேஸ்டன்.

அப்படியானால், இறுதியாக மனித மூளைகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படலாம் என்றாலும், இத்தகைய ஆய்வுகளுக்கான கடுமையான விதிமுறைகளை உடனே நிறுவ வேண்டியதும் மிகவும் அவசியம் என்றும் கூறுகின்றனர் சேஸ்டன் உள்ளிட்ட உலக நரம்பியல் விஞ்ஞானிகள்.


Next Story