‘ஏலியன்’களை ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை?


‘ஏலியன்’களை ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை?
x
தினத்தந்தி 8 May 2018 2:25 PM IST (Updated: 8 May 2018 2:25 PM IST)
t-max-icont-min-icon

நாம் வாழும் இந்த பூமியும், பூமியைப் புகலிடமாகக் கொண்ட தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் உள்ளிட்ட இன்னபிற உயிரினங்கள் அனைத்தும் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய ஆபத்து உலக அழிவு.

உலக அழிவானது, ஒன்று புவி வெப்பமாதல் காரணமாக ஏற்படக்கூடிய சுனாமி, துருவப் பனிமலை உருகிய வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங் களால் நிகழலாம்.

அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டு வரும் தானாக சிந்தித்து செயல்படும் ரோபாட்டுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் மூலமாக நிகழலாம் என்று பல விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.

ஆனால், மூன்றாவதாக, வேற்றுகிரகவாசிகள் என்று அழைக்கப்படும் ‘ஏலியன்’கள் பூமியைக் கைப்பற்றி மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட பல உயிரினங்களை அழித்துவிடலாம் என்று யூகித்திருக்கிறார் மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.

இவற்றில், இயற்கை சீற்றங்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு கருவிகள் மனிதகுல அழிவை ஏற்படுத்தலாம் என்பது நம்பும்படியாக இருக்கிறது. ஆனால், ஏலியன்கள் மனிதகுல அழிவை ஏற்படுத்தலாம் என்பது நம்பும்படியாக இல்லை.

ஏனெனில், ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதே இன்னும் உறுதி செய்யப்படவில்லை. முக்கியமாக, ஏலியன்கள் எப்படி இருப்பார்கள் என்பதும், எங்கு இருக்கிறார்கள் என்பதற்குமான எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை என்பது குறிப் பிடத்தக்கது. இருந்தபோதும், ஆய்வுகள் தொடர்கின்றன.

உண்மை இப்படியிருக்க, ஏலியன்களால் உலக அழிவு ஏற்படலாம் என்பதை ஏற்பது கடினம்தான். அது சரி, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் விண்வெளி ஆய்வுக் கருவிகளும், ஆய்வு நிதிகளும் இருந்தும் இதுவரை உலகில் யாராலும் ஏலியன்களை கண்டறிய முடியாமைக்கு என்ன காரணம்?

இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை சொல்ல முயன்றிருக்கிறார் ஜெர்மனி நாட்டிலுள்ள சோன்னிபெர்க் அப்செர்வேட்டரி எனும் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே.

அதாவது, பூமி தவிர்த்த பிரபஞ்சத்தின் ஏதாவது ஒரு பகுதியில் வாழக்கூடிய மற்றும் விண்வெளிக்கு பயணிக்க முயலும் எந்தவொரு ஏலியன் நாகரிகத்துக்கும், அவர்களின் கோளில் இருக்கும் ‘ஈர்ப்பு விசையைத் தாண்டி பயணிப்பது’ என்பது முக்கியமான சவால் என்கிறார் விஞ்ஞானி ஹிப்கே.



சரி, இதுதான் காரணம் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஏலியன்களை விட குறைவான தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட மனிதர்களே விண்வெளிக்கு சென்று, நிலவு, செவ்வாய், வியாழன் உள்ளிட்ட பலவற்றை வெற்றிகரமாக ஆய்வு செய்யும்போது, ஏலியன்களால் மட்டும் ஏன் ஈர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளி பயணத்தை மேற்கொள்ள முடியாது?

உண்மைதான், ஆனால், பூமி தவிர்த்து உயிர்வாழ்க்கை சாத்தியக்கூறு கொண்ட மற்றொரு கோள் எதுவென்றால் சூப்பர் பூமி (Super-Earth) என்று அழைக்கப்படும் பாறை நிறைந்த புறக்கோள்கள்தான் என்கின்றன விண்வெளி ஆய்வுகள். பூமியை விட அதிக எடைகொண்ட சூப்பர் பூமியில் மிகவும் தடிமனான சுற்றுச்சூழல் இருக்கக்கூடும் என்பதால் ஏலியன்கள் வாழ பல வசதிகள் உண்டு என்கிறார் ஹிப்கே.

ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, விண்வெளிக்கு செல்வது என்பது மிகவும் அதிகமாக செலவு பிடிக்கும் ஒரு முயற்சி என்கிறது வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கேயின் சமீபத்திய ஆய்வு. ஹிப்கேயின் ஆய்வு முடிவுகளில், சூப்பர் பூமியின் புவி ஈர்ப்பு விசையானது பூமியுடன் ஒப்பிடுகையில் மிக மிக அதிகம் என்பதும், ராக்கெட் எரிவாயுவைக்கொண்டு அத்தகைய ஒரு ஈர்ப்பு விசையைத் தாண்டி விண்ணில் பறப்பது என்பது சாத்தியமேயில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

ஆனால், ரசாயன எரிவாயுவுக்கு பதிலாக அணுக்கதிர் அடிப்படையிலான நியூக்ளியர் ப்ரோப்பல்ஷன் (nuclear propulsion) தொழில்நுட்பம் கொண்டு ராக்கெட்டுகளை ஏவ முயன்றால் அது சாத்தியமாகலாம் என்கிறார் ஹிப்கே. இருந்தபோதும், மனிதர்களை விட தொழில்நுட்ப வளர்ச்சியில் பல மடங்கு சிறந்து விளங்கக்கூடியவர்கள் என்று கருதப்படும் ஏலியன்களுக்கு அணுக் கதிர் ராக்கெட் தொழில்நுட்பம் எல்லாம் ஒரு அற்ப விஷயமாக இருக்கும் என்கிறார்கள் சில வானியற்பியலாளர்கள்.

ஒரு வேளை இது உண்மை என்றால் நாம் இந்நேரம் ஏலியன்களை சந்தித்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி வருங்காலம்தான் இதற்கு விடை சொல்ல வேண்டும். 

Next Story