ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 142 பேர் கைது
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வாகனங்களில் சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 142 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லிக்குப்பம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்த செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வண்ணம் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இருப்பினும் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் அறிவித்தனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வாகனங்களில் புறப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அந்தந்த மாவட்ட எல்லையிலேயே அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய உயர் அதிகாரிகள் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் வல்லம்படுகை மற்றும் ரெட்டிச்சாவடி சோதனை சாவடிகளில் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய வாகன சோதனை நடத்தினர். அப்போது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 2 வேன்களில் புறப்பட்டு, சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களை ரெட்டிச்சாவடி சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி, அதில் வந்த 4 ஆசிரியைகள் உள்பட 45 பேரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கிருந்து அவர்கள் வெளியே செல்லாத வகையில் போலீஸ் நிலைய கேட்டை போலீசார் இழுத்து மூடினர். பின்னர் போலீசார், அவர்களது பெயர் மற்றும் முகவரியை கேட்டனர். இதற்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, எங்களை எதற்காக கைது செய்தீர்கள், கேட்டை சாத்திவிட்டு விசாரிப்பது ஏன்?, நாங்கள் என்ன கைதியா? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் கைதான 45 பேரும், அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கேயும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் வல்லம்படுகை சோதனை சாவடி வழியாக 2 வேன்களில் வந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 60 பேரை சிதம்பரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள், சிதம்பரம் கமலீஸ்வரன் கோவில் தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதே போல் விருத்தாசலத்தில் 37 பேர் கைது செய்யப் பட்டனர்.
Related Tags :
Next Story