கிணற்றில் ஈரோட்டை சேர்ந்தவர் பிணமாக மீட்பு கொலை செய்து வீசினார்களா? போலீசார் விசாரணை


கிணற்றில் ஈரோட்டை சேர்ந்தவர் பிணமாக மீட்பு கொலை செய்து வீசினார்களா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 May 2018 4:15 AM IST (Updated: 9 May 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே உள்ள கிணற்றில் இருந்து ஈரோட்டை சேர்ந்தவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரை கொலை செய்து யாரும் கிணற்றில் வீசினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் கொல்லிமலையான் கோவில் பின்புறம் உள்ள ஒரு கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக நேற்று காலை அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

பிணமாக கிடந்தவரின் சட்டை பையில் இருந்த ஆதார் அட்டையை வைத்து விசாரித்த போது அவர், ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த உதயகுமார் (வயது 40) என தெரியவந்தது. மேலும் அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. இதனால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனையடுத்து அவரது உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் செய்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் ஈரோட்டிலிருந்து அரவக்குறிச்சி பகுதிக்கு உதயகுமார் ஏன் வந்தார்? முன்விரோத தகராறில் மர்ம நபர்கள் அவரை கடத்தி வந்து அடித்து கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story