போடியில் பலத்த மழை; குடியிருப்புக்குள் புகுந்த தண்ணீர்
போடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் தாழ்வான குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.
போடி
போடியில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இதை தொடர்ந்து இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.
பரமசிவன் கோவில் சாலை வழியாக வஞ்சி ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்ததில் திருவள்ளுவர் சிலை திடல் பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் ரெங்கநாதபுரம் ஓடையில் வந்த தண்ணீர் போடி பஸ்நிலைய நுழைவு வாயில் பகுதியில் குளம்போல் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
போடி சுந்தரராஜபுரம் ஆதிதிராவிடர் காலனியில் தண்ணீர் பெருக்கெடுத்ததில் இப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் இவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா ஆடுகளும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் பரவியதால் போடி தாசில்தார் ஆர்த்தி தலைமையில் வருவாய்த்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் ஆடுகள் பாதுகாப்பாக இருந்தது தெரிந்தது.
போடி வருவாய் ஆய்வாளர் அலுவலக சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது. இந்த மழை நீர், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்குள் புகுந்தது. குறைந்த அளவு தண்ணீர் புகுந்ததால் ஆவணங்கள் எதுவும் அதிர்ஷ்டவசமாக நாசமாகவில்லை. இதே போல் பழைய பஸ்நிறுத்தம், போஜன் பார்க் ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது.
பலத்த மழைக்கு போடி வடக்குவெளி வீதியில் தீயணைப்பு நிலையம் அருகே சாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அந்த பகுதியில் பாதாளச்சாக்கடை திட்டத்தின் கீழ் தோண்டப்பட்ட இடங்களில் தார்சாலை சரிவர போடாமல் இருந்ததால் மழைக்கு பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது.
போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, தென்னை ஆகியவற்றுக்கு கோடை மழை பயன் உள்ளதாக இருந்தது. அதே நேரத்தில் மழையின் காரணமாக இலவ மரங்களில் காய்கள் பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story