மயிலாடும்பாறை பகுதியில் மின்தடையால் பொதுமக்கள் அவதி
மயிலாடும்பாறை பகுதியில் தொடர்ந்து மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடமலைக்குண்டு
கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை, உப்புத்துறை, ஆட்டுப்பாறை உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனை சீரமைக்க இரண்டு நாட்கள் வரை ஆனது. இதன் காரணமாக உப்புத்துறை, ஆட்டுபாறை உள்ளிட்ட கிராமங்களில் 2 நாட்கள் மின்சாரம் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த கிராமங்களில் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. மேலும் வீடுகளில் மின்சாரம் இல்லாததால் ஆழ்துளை கிணறுகளிலும் நீர் எடுக்க முடியவில்லை. எனவே பொதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் மிகுந்த சிரமப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டது கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் உப்புத்துறை உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதில் இரவு நேரங்களில் 2 மணி நேரத்திற்கும் மேல் மின்தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கடமலைக்குண்டு கிராமத்திலும் தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மயிலாடும்பாறை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தடையில்லாத மின்சாரம் வினியோகிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story