நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி தொடங்கும் போது 4 அடுக்கு பாதுகாப்பு


நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி தொடங்கும் போது 4 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 May 2018 4:00 AM IST (Updated: 9 May 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி தொடங்கும் போது அம்பரப்பர் மலைக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடவும், துணை ராணுவத்தை பாதுகாப்பு பணிக்கு களமிறக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

தேனி

தேனி மாவட்டம், போடி அருகே பொட்டிப்புரம் பகுதியில் உள்ள அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. ரூ.1500 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த ஆய்வு மையத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்து விட்டால் ஆய்வு மையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இதற்கிடையே இந்த திட்டத்துக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் நாம் தமிழர் கட்சியினர் அம்பரப்பர் மலையில் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இந்த திட்டத்தை எதிர்த்து மதுரையில் இருந்து கம்பம் வரை விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டார். கடந்த 6-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், இந்த ஆய்வு மையம் அமைக்கும் திட்டப் பணிகளை தொடங்கும் போது பாதுகாப்பு கருதி அம்பரப்பர் மலைப்பகுதிக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசுக்கு உளவுத்துறை போலீசார் அறிக்கை அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி தொடங்கினால், அப்போது எந்த இடையூறும் இன்றி பணிகள் நடக்க வேண்டும். இது மத்திய அரசின் திட்டம் என்பதால் பணிகள் நடைபெறும் பகுதியில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதன்பிறகு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், பட்டாளியன் படைப்பிரிவு போலீசார், ஆயுதப்படை போலீசார் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன’ என்றார்.

Next Story