பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே பூட்டி கிடக்கும் கழிப்பறை


பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே பூட்டி கிடக்கும் கழிப்பறை
x
தினத்தந்தி 9 May 2018 4:15 AM IST (Updated: 9 May 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

பென்னிகுவிக் மணிமண்டபம் அருகேயுள்ள கழிப்பறை பூட்டியே கிடப்பதால், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர்

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுவிக்குக்கு நினைவு மணிமண்டபம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை காண்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த மணிமண்டபம் தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த மணிமண்டபம் அருகே, ரூ.9½ லட்சம் செலவில் சுற்றுலா வளர்ச்சி நிதியின் கீழ் கழிப்பறை கட்டப்பட்டது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கழிப்பறை பூட்டப்பட்டது. அதன் பின்னர் திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது.

தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. அவர்கள் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள், கழிப்பறை செல்வதற்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே கழிப்பறையில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story