மழைநீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டியதில் வீட்டின் முன்பகுதி சரிந்தது மயிலாப்பூர் பகுதி மக்கள் அச்சம்
மயிலாப்பூரில் மழைநீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டியபோது வீட்டின் முன்பகுதி சரிந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அடையாறு,
சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.சிவசாமி சாலையில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக சாலை ஓரத்தில் சுமார் 7 அடி ஆழம், 150 மீட்டர் நீளத்திற்கு பள்ளம் தோண்டப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது பாலாஜி என்பவரின் வீட்டின் அஸ்திவாரம் பலமிழந்து முன்பகுதி சரிந்தது. இதனால் பள்ளம் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அந்த வீட்டுக்கு தற்காலிகமாக முட்டு கொடுக்கப்பட்டது. நேற்று மாலை அந்த வீட்டின் முன் பகுதியில் இருந்த படிகட்டுகளும் சரிந்து விழுந்தன.
மக்கள் அச்சம்
இதனால் வீட்டின் மாடியில் குடியிருந்தவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றதால் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இந்த பகுதியில் மேலும் சில வீடுகளும் சரியும் நிலையில் உள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இந்த பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக ஆமை வேகத்தில் நடந்துவருகிறது. வீடுகளை ஒட்டி சுமார் 7 அடி ஆழம் பள்ளம் தோண்டும்போது எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் ஒப்பந்ததாரர் செய்யவில்லை. இதனால் வீடுகளின் அஸ்திவாரம் பலமிழந்து இந்த சம்பவம் நடந்தது. மேலும் பல வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளது.
பலரும் தங்கள் சொந்த செலவில் மணல் மூட்டைகளை அடுக்கி வீட்டின் அஸ்திவாரம் பலமிழக்காமலிருக்க பாதுகாப்பு செய்துள்ளனர். இந்த சாலையில் மாநகர பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதால் அதிர்வுகள் ஏற்படுகிறது. இதனால் கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சரிசெய்யப்படும்
சம்பவ இடத்தை பார்வையிட்ட மண்டல உதவி பொறியாளர் குகன் கூறுகையில், “இந்த பகுதியில் ஏற்கனவே இருந்த மழைநீர் வடிகால் பழுதடைந்து அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் புதிதாக அமைக்கும் பணிகள் ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். பழுதடைந்த வீட்டை ஒப்பந்ததாரர் உடனடியாக சரிசெய்து கொடுப்பதாக கூறியுள்ளார்” என தெரிவித்தார்.
Related Tags :
Next Story