‘டெபாசிட்’டை தக்க வைக்க சோனியாவை பிரசாரத்துக்கு அனுப்பி உள்ளார் ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி தாக்கு


‘டெபாசிட்’டை தக்க வைக்க சோனியாவை பிரசாரத்துக்கு அனுப்பி உள்ளார் ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி தாக்கு
x
தினத்தந்தி 9 May 2018 4:00 AM IST (Updated: 9 May 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால் ‘டெபாசிட்’ தொகையை தக்க வைக்க சோனியாவை பிரசாரத்துக்கு ராகுல்காந்தி அனுப்பி உள்ளார் என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கினார்.

பெங்களூரு, 

தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால் ‘டெபாசிட்’ தொகையை தக்க வைக்க சோனியாவை பிரசாரத்துக்கு ராகுல்காந்தி அனுப்பி உள்ளார் என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கினார்.

சூறாவளி பிரசாரம்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. இந்த நிலையில் மாநிலத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பிரதமர் மோடி கடந்த 1-ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார். அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற நிலையில் 4 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார்.

கடைசியாக அவர் கடந்த 6-ந் தேதி உப்பள்ளியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு அவர் நேற்று மீண்டும் கர்நாடகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். வடகர்நாடக மாவட்டமான விஜயாப்புராவில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

‘டெபாசிட்’டை தக்கவைக்க...

“கர்நாடகத்தில் காங்கிரஸ் பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடிக்கிறது. மதம், சாதி அடிப்படையில் காங்கிரஸ் மக்களை பிரிக்கிறது. சகோதரர்களுக்கு இடையே சண்டையை காங்கிரஸ் மூட்டிவிடுகிறது. ஆனால் பசவண்ணரின் மண்ணான இந்த பகுதி மக்கள் இதை அனுமதிக்க மாட்டார்கள். சித்தராமையா மந்திரிசபையில் முறைகேடு புகார்களுக்கு ஆளாகாதவர்கள் ஒருவர் கூட இல்லை.

முறைகேடு புகார்கள் இல்லாத மந்திரி ஒருவரின் பெயரை நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். கர்நாடகத்தில் வெற்றி பெறுவதில் ராகுல் காந்தியின் திறமை மீது காங்கிரசின் மூத்த தலைவர்கள் கூட நம்பிக்கையை இழந்துவிட்டனர். அதனால் தனது கட்சி வேட்பாளர்களின் டெபாசிட்டை பாதுகாத்துக்கொள்ள தனது தாயாரை (சோனியாகாந்தி) ராகுல் காந்தி பிரசாரத்திற்கு அனுப்பி இருக்கிறார். பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடிக்கும் காங்கிரசை கர்நாடகத்தில் மக்கள் வேரோடு பிடுங்கி எறிவார்கள்.

தோல்வி பயத்தை பார்க்க முடிகிறது

காங்கிரஸ் தலைவர்களின் முகத்தில் தோல்வி பயத்தை பார்க்க முடிகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு மக்களிடம் என்ன சொல்லலாம் என்பது குறித்து அவர்கள் யோசித்து வருகிறார்கள். தேர்தல் முடிவடையும் வரை என்ன சொல்லி நாட்களை நகர்த்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் வீடுகளில் உட்கார்ந்து தேர்தலுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குறை சொல்வது உள்பட தோல்விக்கு காரணத்தை கூற அதற்கான வழிகளை கண்டறிந்து வருகிறார்கள்.

காங்கிரசுக்கு முடிவு கட்ட மக்களாகிய நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள். 5 ஆண்டுகளுக்கு அந்த கட்சிக்கு தண்டனை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மந்திரியை உங்களுக்கு நன்றாக தெரியும். அவர் எப்படி திட்ட பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கினார் என்பது உங்களுக்கு தெரியும். ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் இருந்து கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இதன் மூலம் ஒப்பந்ததாரர்களுடன் மந்திரிகளுக்கு உள்ள தொடர்பு அம்பலமாகியுள்ளது.

நாட்டை அழித்துவிட்டது

குடும்ப ஆட்சியை நடத்தி காங்கிரஸ் நாட்டை அழித்துவிட்டது. ஆனால் அந்த குடும்பத்தை காக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி பொய்களை பரப்பி வருகிறது. பெண்களின் பாதுகாப்பில் காங்கிரஸ் அக்கறை செலுத்தவில்லை. வாக்கு வங்கி அரசியலை நடத்தும் காங்கிரஸ், பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுகிறது.

முஸ்லிம் பெண்களை பாதுகாக்க நாங்கள் முத்தலாக் மசோதாவை கொண்டு வந்துள்ளோம். அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளோம். ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்ற காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை. ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்கும் கொள்கையை விதைத்த பசவண்ணரின் மண்ணில் சாதிகளின் பெயர்களில் விஷ விதைகளை விதைக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. மக்கள் காங்கிரசை நிராகரிப்பார்கள்.

இவ்வாறு மோடி பேசினார்.

Next Story