முந்தைய ஆட்சியில் ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் மன்மோகன்சிங் இயக்கப்பட்டார் பிரதமர் மோடி குற்றச்சாட்டு


முந்தைய ஆட்சியில் ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் மன்மோகன்சிங் இயக்கப்பட்டார் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 May 2018 4:15 AM IST (Updated: 9 May 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ‘ரிமோட் கன்ட்ரோல்‘ மூலம் மன்மோகன்சிங் இயக்கப்பட்டார் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

பெங்களூரு,

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ‘ரிமோட் கன்ட்ரோல்‘ மூலம் மன்மோகன்சிங் இயக்கப்பட்டார் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

சித்தராமையாவுக்கு அக்கறை இல்லை

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெங்களூரு பசவனகுடியில் பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:–

பெங்களூருவில் உள்ள 2 மந்திரிகள் மற்றும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் தவறான செயல்பாடுகளால் பெங்களூருவின் பெருமை நாசமாகிவிட்டது. சிறையில் இருக்க வேண்டிய இவர்கள் மூன்று பேரும் ஆட்சியை நடத்துகிறார்கள். இத்தகையவர்களை தான் காங்கிரஸ் ஆதரிக்கிறது. பெங்களூரு வளர்ச்சியில் சித்தராமையாவுக்கு அக்கறை இல்லை. பெங்களூருவின் எதிர்காலத்தையே முதல்–மந்திரி பாழாக்கிவிட்டார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை

பெங்களூருவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள ஏரிகளில் தீ பற்றி எரிகிறது. இதை சரிசெய்ய மாநில அரசு கவனம் செலுத்தவில்லை. லோக்ஆயுக்தாவின் அதிகாரத்தை குறைத்துவிட்ட இந்த காங்கிரஸ் அரசு ஊழல் தடுப்பு படையை அமைத்துள்ளது. அதன் மூலம் மந்திரிகள் மீது வரும் புகார்கள் நிராகரிக்கப்படுகின்றன. அவர்களுக்கு சித்தராமையா எந்த தவறும் செய்யவில்லை என்று நற்சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகள் குறித்து கர்நாடக மக்களுக்கு சித்தராமையா கணக்கு கொடுக்க வேண்டும். சோனியா காந்தி குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்பது, ஊழல் செய்தது, குற்றங்கள் மற்றும் கற்பழிப்பு அதிகரிப்பு, விவசாயிகள் தற்கொலை, ஒரு சமுதாயத்தை உடைத்தது என 5 தவறுகள் தான் இந்த காங்கிரஸ் அரசின் சாதனை ஆகும்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்

தேர்தல் அறிக்கையில் ஆங்காங்கே தவறுகளை செய்து, கன்னட மொழிக்கு காங்கிரஸ் அவமானத்தை இழைத்துவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம். விவசாயிகளுக்கு பாசனத்திற்கு நீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்போம். சமுதாயத்தை உடைத்த காங்கிரஸ் ஆட்சியை விரட்டியடியுங்கள். பெண்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம்.

பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியுள்ள வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம். பெங்களூருவில் அனைத்து பகுதி மக்களுக்கும் மெட்ரோ ரெயில் வசதி கிடைக்க செய்வோம். இதற்கேற்ற வகையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை விரிவுபடுத்துவோம். கடந்த 2017–ம் ஆண்டு 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்து கூறியுள்ளனர்.

அந்நிய முதலீடுகள்

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 7 மடங்கு அதிகரித்து இருக்கிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ‘ரிமோட் கன்ட்ரோல்‘ மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இயக்கப்பட்டார். இதனால் உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இப்போது இந்தியாவை உலக நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன. அந்நிய முதலீடுகள் வருவது அதிகரித்து உள்ளது. தொழில் முதலீடுகள் செய்வதற்கு இந்தியா உகந்த நாடாக மாறியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களை அமைப்பதில் கடந்த 70 ஆண்டுகளில் செய்யாத சாதனையை 4 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டில் 400 விமானங்கள் இருந்தன. இப்போது நாங்கள் புதிதாக 900 விமானங்களை வாங்க பணி ஆணை கொடுத்துள்ளோம். நாங்கள் விமான கொள்கை ஒன்றை வகுத்துள்ளோம்.

விமானங்களில் பயணம்

இதனால் விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ளது. ரெயில்களில் குளுகுளு பிரிவில் பயணம் செய்பவர்களை விட விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எல்.இ.டி. பல்புகளின் விலை முன்பு அதிகமாக இருந்தது. அதன் விலையை நாங்கள் பெரிய அளவுக்கு குறைத்துள்ளோம்.

இவ்வாறு மோடி பேசினார்.


Next Story