பால் தாக்கரேயை சிறையில் தள்ளமுயன்ற சகன் புஜ்பாலை விதி பழிவாங்கிவிட்டது சிவசேனா தாக்கு
பால் தாக்கரேயை சிறையில் தள்ள முயன்ற சகன் புஜ்பாலை விதி பழிவாங்கிவிட்டதாக சிவசேனா கட்சி கடு மையாக தாக்கி உள்ளது.
மும்பை,
பால் தாக்கரேயை சிறையில் தள்ள முயன்ற சகன் புஜ்பாலை விதி பழிவாங்கிவிட்டதாக சிவசேனா கட்சி கடுமையாக தாக்கி உள்ளது.
சகன் புஜ்பால்
மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரி சகன் புஜ்பால்(வயது70). தேசியவாத காங்கிரசை சேர்ந்த இவர், மராட்டிய பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தபோது தனது அதிகாரத்தை பயன் படுத்தி சில தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு முறைகேடாக பயனடைந்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சகன் புஜ்பால் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் இவரது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு கடந்த 4-ந் தேதி மும்பை ஐகோர்ட்டு இவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சகன்புஜ்பால் மும்பை கே.இ.எம். மாநகராட்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறியிருப்பதாவது:-
விதி பழிவாங்கிவிட்டது
சகன் புஜ்பால் மராட் டியத்தின் உள்துறை மந்திரியாக இருந்தபோது, சிவசேனா நிறுவனர் மற்றும் தலைவரான மறைந்த பால் தாக்கரேயை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என முயற்சித்து வந்தார். எங்களது கூட்டணி கட்சி யான பா.ஜனதா அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது.
ஒருவேளை பால் தாக்கரே கைது செய்யப்பட்டால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க பிறமாநில போலீசார் மும்பையில் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். சகன் புஜ்பாலின் அன்றைய செயலுக்காக இன்று அவரை விதி பழிவாங்கிவிட்டது.
கார்த்தி சிதம்பரம்
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சகன் புஜ்பால் மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டுகள்தான் கூறப் பட்டன. ஆனால் கார்த்தி சிதம்பரம் வெறும் 8 நாட்களில் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டார். ஆனால் சகன் புஜ்பாலுக்கு ஜாமீன் கிடைக்க 2 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. சட்டமும், அதிகார பலமும் அரசியல் பழிவாங்கலுக்காக அடிக்கடி தவறாக பயன்படுத்தப் படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சகன் புஜ்பால் தனது அரசியல் வாழ்வை சிவசேனா கட்சியில் தொடங்கி, கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி காங்கிரசுக்கு சென்றார். பின்னர் சரத்பவார் காங்கிரசில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரசை தொடங்கியபோது அவருடன் சேர்ந்து செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story