டி.கல்லுப்பட்டி அருகே நோய் தாக்கி 75 செம்மறி ஆடுகள் சாவு


டி.கல்லுப்பட்டி அருகே நோய் தாக்கி 75 செம்மறி ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 9 May 2018 4:32 AM IST (Updated: 9 May 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டி பகுதியில் துள்ளுமாரி மற்றும் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி 75-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் இறந்தன. கால்நடை துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள காரைக்கேணி கிராமத்தில் ஏராளமானோர் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்த கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கு சொந்தமான 46 ஆடுகள் செத்தன. இதே போல் ராமசாமி என்பவரின் 10 ஆடுகளும் இறந்தன.

இது குறித்து கால்நடைத்துறையினர் நேரில் ஆய்வு செய்த போது அந்த ஆடுகள் துள்ளுமாரி நோய் தாக்கி இறந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாலமுருகன் என்பவரின் 19 ஆடுகள் இறந்தன. இதனைத் தொடர்ந்து கால்நடை துறையினர் அக்கிராமத்திற்கு சென்று இறந்த ஆடுகளின் உறுப்புகளை ஆய்வு செய்தனர். இதில் அந்த ஆடுகள் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இறந்தது தெரிய வந்தது. இதே போன்று மேலும் பலரது ஆடுகள் நோய் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் ராஜசேகர் தலைமையில் கால்நடை துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆட்டு கூட்டத்தில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கப்பட்டிருந்த மேலும் 5 ஆடுகளை தனிமைப்படுத்துமாறு கூறினர். நோய் பரவாமல் இருப்பதற்கு அப்பகுதியில் உள்ள ஆடுகளுக்கு தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகிறது.

மேலும் “ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்த ஆடுகள் ஆழமான குழியில் புதைக்கப்பட்டது. இது குறித்து இணை இயக்குனர் ராஜசேகர் கூறுகையில், இப்பகுதிகளில் அடைப்பான் நோய் எனும் ஆந்த்ராக்ஸ் நோயால் செம்மறி ஆடுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2 அல்லது 3 நாட்களில் நோய் கட்டுப்படுத்தப்படும். மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கோடை காலத்தில் மழை பெய்யும்போது மண்ணின் தன்மை மாறி கால்நடைகளை பாதிக்கும் நோய் ஏற்படுகிறது. கால்நடைகளுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாதபோது நோய் தாக்குகிறது. ஆடுகள் மூலம் இந்த நோய் மனிதர்களுக்கு பரவினால் அலர்ஜி ஏற்படும். இதனால் பாதிப்பு ஏற்படாது.“ என்றார்.

ஆடு வளர்ப்பை நம்பித்தான் பிழைப்பு நடத்தி வருகிறோம், எனவே நோய் தாக்குதலால் இறந்த ஆடுகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கினால் மிகுந்த உதவியாக இருக்கும் என்று ஆடு வளர்ப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story