புலம்பெயர் தொழிலாளர் நலனுக்காக ஒருங்கிணைந்த சட்டம் நிறைவேற்ற வேண்டும், மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு பரிந்துரை


புலம்பெயர் தொழிலாளர் நலனுக்காக ஒருங்கிணைந்த சட்டம் நிறைவேற்ற வேண்டும், மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு பரிந்துரை
x
தினத்தந்தி 9 May 2018 5:30 AM IST (Updated: 9 May 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

புலம்பெயர் தொழிலாளர் நலனுக்காக ஒருங்கிணைந்த சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது.

மதுரை,

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹரிபிரசாத்மால்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘என்னுடைய உறவினர்கள் ராஜேந்திரன்(வயது 27), சிவராம்(20), குஞ்சுபிகாரி(19), சஞ்சய்(20), குனில்(20) ஆகியோர் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தனியார் போர்வெல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு சரியான உணவு, சம்பளம் வழங்கப்படாமல் கொத்தடிமையாக நடத்தப்படுகின்றனர். இதனால் 5 பேரையும் மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது போர்வெல் நிறுவன உரிமையாளர் சார்பில், “மனுதாரரும், 5 தொழிலாளர்களும் பணம் மற்றும் எந்திரங்களை திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த குற்றச்சம்பவத்துக்கு மனுதாரர் தான் மூளையாக செயல்பட்டுள்ளார். பிரச்சினைக்கு பின்னர் தொழிலாளர்கள் 5 பேரும் மீண்டும் வேலைக்கு சேர்த்து கொள்ளப்பட்டனர். இதனால் அவர்கள் சட்டவிரோத காவலில் வைக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ஆங்கிலேயர் ஆட்சியின்போது குறிப்பாக விடுதலை போராட்ட காலத்தில் ஏராளமான இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை பாதுகாக்கவும், போலீசாரின் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் நோக்கத்திலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் வசதி கொண்டு வரப்ப ட்டது. தற்போது இந்த வசதியை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். காதலில் சிக்கி வீட்டைவிட்டு வெளியேறும் மகன், மகள்களை மீட்கும் நோக்கத்தில் பெற்றோர்கள் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த மனுதாரர், தான் செய்த மோசடி தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதற்காக மனுதாரருக்கு அபராதம் விதிக்க வேண்டும். இருப்பினும் மனுதாரரின் ஏழ்மையை கருத்தில் கொண்டு அபராதம் விதிக்கப்படவில்லை.

புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை அதிகமாக உள்ளது. சில இடங்களில் புலம்பெயர் தொழிலாளர்களால் உரிமையாளர்களும், சில இடங்களில் உரிமையாளர்களால் புலம்பெயர் தொழிலாளர்களும் பிரச்சினையை சந்திக்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் வழக்குகளில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களின் பிரச்சினை சமூக பிரச்சினையாகும். இதனால் இப்பிரச்சினையை முறைப்படுத்த வேண்டியது அவசியம். தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பது தொடர்பாக சில பரிந்துரைகளை வக்கீல் டி.எஸ்.வெங்கட்ரமணா அளித்துள்ளார்.

அதில், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினையை தீவிரமாக அணுக வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்கள் குறிப்பாக, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் புலம்பெயர் தொழிலாளர் நலனுக்காக ஒருங்கிணைந்த சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் ஆதார்கார்டு, பான்கார்டு பெற வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம், இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி வழங்க வேண்டும்.

உள்ளூர் போலீஸ் நிலையத்தில் தங்களின் பெயர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். வேறு போலீஸ் எல்லைக்குள் செல்லும்போது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர், சொந்த ஊர், முகவரி, அவர்களுக்கு பணி வழங்கியவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பதிவேட்டை தொழிலாளர் துறை பராமரிக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதி வழங்க வேண்டும் என்று பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகள் மத்திய, மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையினரின் மேல்நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். 

Next Story