நசரத்பேட்டை, ஸ்ரீபெரும்புதூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது


நசரத்பேட்டை, ஸ்ரீபெரும்புதூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது
x
தினத்தந்தி 9 May 2018 6:30 AM IST (Updated: 9 May 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

நசரத்பேட்டை, ஸ்ரீபெரும்புதூரில் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பேரணியாக சென்று சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டையை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, நசரத்பேட்டை யில் போலீசார் சோதனைச் சாவடி அமைத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பஸ், கார்கள் என அனைத்திலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் 80-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் அரசு பஸ்களில் வருபவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். பஸ்சில் பயணம் செய்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சிலரை கைது செய்தனர். சாலையின் நடுவில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.

ஸ்ரீபெரும்புதூர் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 110 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். 

Next Story