தேனி கனரா வங்கியில் ரூ.1 கோடி மோசடி செய்தவர்களை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
தேனி கனரா வங்கி கிளையில் ரூ.1 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் உள்பட 2 பேரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். வங்கியில் இருந்து மாயமான நகைகள் என்ன ஆனது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
தேனி
தேனி நகர் மதுரை சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு அடகு வைத்த பலரின் நகைகள் மாயமானதுடன், போலி நகைகளும் அடகு வைத்து மோசடி செய்யப்பட்டு உள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் செந்தில், அவருடைய உதவியாளர் வினோத் ஆகிய 2 பேர் மீதும் வங்கி முதன்மை மேலாளர் சுப்பையா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் செந்தில், வினோத் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நகை அடகு வைத்ததில் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. வழக்குப்பதிவு செய்து ஒரு வார காலம் ஆகியும் இன்னும் மோசடி செய்த இருவரும் கைது செய்யப்படவில்லை. தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
செந்தில் உள்பட 2 பேரும் பிடிபட்டால் தான் வங்கியில் இருந்து மாயமான நகைகள் என்ன ஆனது என்பது தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் இருவரும் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், நகைகள் என்ன ஆனது? என தெரியாமல் அடகு வைத்த பொதுமக்கள் தொடர்ந்து வங்கிக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். வங்கி ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கேட்டபோது, ‘செந்தில், வினோத் ஆகிய இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களை பிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கு தலைமறைவாக உள்ளார்கள் என்பதை தேடி வருகிறோம். அவர்கள் கைது செய்யப்பட்டால் தான், மாயமான நகைகளை மீட்க முடியும். மேலும் இந்த மோசடியில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பதும் தெரியவரும்’ என்றனர்.
Related Tags :
Next Story