கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அரசு ஆசிரியர்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்


கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அரசு ஆசிரியர்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்
x
தினத்தந்தி 10 May 2018 4:00 AM IST (Updated: 10 May 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான எடையில் இருப்பது இல்லை. இதனால் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்கள் வினியோகிக்கப்படுவது இல்லை. இதனால் பொது மக்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி ரேஷன் கடை ஊழியர்கள் மாநில அளவில் கடைகளை அடைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்தநிலையில் நாகை புதுக்கடையில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் 2 பேர் சிலரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் தாக்கப்பட்டவர்கள் மீது போலீஸ் துறை வழக்குப்பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 14-ந்தேதி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை பணியாளர்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டம் தொடர்பாக அரசும், காவல்துறையும் நடந்து கொண்ட விதம் சரியான அணுகுமுறையல்ல. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story