சத்திரப்பட்டியில் இருந்து மதுரைக்கு நேரடியாக பஸ் இயக்க வலியுறுத்தல்


சத்திரப்பட்டியில் இருந்து மதுரைக்கு நேரடியாக பஸ் இயக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2018 3:15 AM IST (Updated: 10 May 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

சத்திரப்பட்டியில் இருந்து வன்னியம்பட்டி வழியாக மதுரைக்கு நேரடி பஸ் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

இந்தியாவில் உள்ள மருத்துவ மனைகளுக்கு தேவைப்படும் பேண்டேஜ் துணியில் 50 சதவீதத்தை சத்திரப்பட்டிதான் நிறைவு செய்கிறது.

பேண்டேஜ் துணி உற்பத்திக்கு அடித்தளமான விசைத்தறிக் கூடங்கள் சத்திரப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் 500-க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன.

நாளொன்றுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான பேண்டேஜ் துணி தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்திலேயே பெரும் தொகையை வரியாக கொடுக்கும் பேரூராட்சி சத்திரப்பட்டியாகும்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பேண்டேஜ் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் வருகின்றனர்.

அதுபோல, கொடுக்கப்பட்ட பேண்டேஜ் துணிக்கான பணத்தை பெற வசூலுக்கும், புதிய ஆர்டர் எடுக்கவும் சத்திரப்பட்டி வியாபாரிகள் தினமும் மதுரை செல்ல வேண்டியிருக்கிறது.

மேலும், கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் வெளியூரில் உள்ள கல்லூரிகளுக்கு செல்வதற்கு பெரும் நேரத்தை வீணாக பஸ் பயணத்தில் செலவழிக்கும் நிலையும் உள்ளது. சத்திரப்பட்டியில் இருந்து ராஜபாளையம் சென்று அங்கிருந்துதான் மதுரை செல்ல வேண்டியிருக்கிறது.

சத்திரப்பட்டியில் இருந்து ராஜபாளையம் செல்ல 5 கிலோ மீட்டரும், ராஜபாளையத்தில் இருந்து வன்னியம்பட்டி விலக்கு வரை செல்ல 7 கிலோ மீட்டர் என மொத்தம் 12 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்வதற்கு பதில், சத்திரப்பட்டியில் இருந்து வன்னியம்பட்டி வழியாக வன்னியம்பட்டி விலக்கை அடைய 4 கிலோ மீட்டர் தூரம் தான். சத்திரப்பட்டியில் இருந்து வன்னியம்பட்டி வழியாக மதுரை செல்லும்போது 8 கிலோ மீட்டர் தூரம் மிச்சமாவதோடு 45 நிமிடம் கால விரயமும் தடுக்கப்படுகிறது.

எனவே, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வியாபாரிகள் நலனை கருத்தில் கொண்டும் சத்திரப்பட்டி பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் நீண்ட கால கோரிக்கையை கவனத்தில் கொண்டும் சத்திரப்பட்டியில் இருந்து வன்னியம்பட்டி வழியாக நேரடியாக மதுரைக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக த.மா.கா. தெற்கு மாவட்ட செயலாளர் துள்ளுகுட்டி ராமன் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார். 

Next Story