என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தடை கோரி வழக்கு, உயர்கல்வித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்


என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தடை கோரி வழக்கு, உயர்கல்வித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 May 2018 4:30 AM IST (Updated: 10 May 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறைக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற வழக்கில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை அரசரடி பகுதியை சேர்ந்த வக்கீல் அன்புநிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2018-19-ம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கையானது முழுக்க முழுக்க ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கடந்த 6.11.2017 அன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கையால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வை எழுதியவர்களில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 268 பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மற்றும் கணினி வசதிகளை முழுமையாக பெறவில்லை.

இதற்காக அவர்கள் நகர்ப்புறங்களில் உள்ள இணையதள மையங்களுக்கு அலைய வேண்டியது உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கட்டணங்களை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் மட்டுமே செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கிராமப்புற மாணவர்கள் பலரிடம் கிரெடிட், டெபிட் கார்டுகள் கிடையாது. ஆன்லைனில் விண்ணப்பித்தபோதும், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் சான்றிதழ்கள் சரிபார்க்கவும், கவுன்சிலிங்கில் பங்கேற்கவும் மீண்டும் மீண்டும் அலையும் நிலை உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பல தவறுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் என்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்ற கிராமப்புற மாணவர்களின் விருப்பம் கனவாக மாறும் நிலை உள்ளது.

இதுபோன்ற மாணவர்கள் சந்திக்கும் பல்வேறு நடைமுறை சிரமங்களை கருத்தில் கொண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை முழுவதும் ஆன்லைன் மயமாக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பழைய நடைமுறையை அதாவது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று அதன் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கோவிந்தராஜ், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு குறித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் சேர்க்கை பிரிவு செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். 

Next Story