தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தது, தூத்துக்குடி மாநகரம் 192 கேமராக்களுடன் நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறப்பு


தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தது, தூத்துக்குடி மாநகரம் 192 கேமராக்களுடன் நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறப்பு
x
தினத்தந்தி 10 May 2018 3:30 AM IST (Updated: 10 May 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

192 கேமராக்களுடன் நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டதன் மூலம் நேற்று முதல் தூத்துக்குடி மாநகரம் தீவிர போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

192 கேமராக்களுடன் நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டதன் மூலம் நேற்று முதல் தூத்துக்குடி மாநகரம் தீவிர போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய வளாகத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையுடன் மாநகர பகுதியில் இயங்கி வரும் 100 கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் வ.உ.சி. துறைமுகம் சார்பில் ரூ.30 லட்சம் செலவில் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக 5 டி.வி.க்கள் பொருத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்டு உள்ளன. மாநகரம் முழுவதும் கூடுதலாக 92 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இது தவிர 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் 10 மோட்டார் சைக்கிள்களில் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமை தாங்கினார். இணை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட அதிநவீன கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.

400 கேமராக்கள் பொருத்த திட்டம்

இது குறித்து இணை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறும் போது, வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகம் சார்பில் ரூ.30 லட்சம் செலவில் அதிநவீன கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபடும் 10 மோட்டார் சைக்கிள்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஏதேனும் சம்பவங்கள் நடந்தால், அந்த இடத்துக்கு அருகில் உள்ள மோட்டார் சைக்கிள் ரோந்து போலீசாரை விரைந்து அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விபத்துக்கள், சட்டம், ஒழுங்கு பிரச்சினை, குற்றங்களை தடுக்க இந்த கட்டுப்பாட்டு அறை உதவியாக இருக்கும். தற்போது மொத்தம் 192 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. விரைவில் 400 கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான வசதிகள் உள்ளன. இதன் மூலம் தூத்துக்குடி நகரில் நடக்கும் குற்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்டிப்பாக கட்டுப்படுத்தவும், குறைக்கவும் முடியும்.

போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் மாநகரம்

ஏற்கனவே தென்பாகம், மத்தியபாகம், வடபாகம் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. தற்போது கூடுதலாக தாளமுத்துநகர், தெர்மல்நகர், முத்தையாபுரம் ஆகிய இடங்களிலும் கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. உயர்தர கேமிராக்கள், இரவு நேரத்திலும் தெளிவாக படம்பிடிக்கக்கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் நகர்ப்புற உட்கோட்டம் முழுவதும் கண்காணிப்புக்குள் வந்து உள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் திரேஸ்புரத்தில் முதியவர் கடத்தப்பட்ட போது, 4 மணி நேரத்தில் மீட்டோம். 10-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகளில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story