கோவில்பட்டி அருகே பயங்கரம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றவர் கைது


கோவில்பட்டி அருகே பயங்கரம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றவர் கைது
x
தினத்தந்தி 10 May 2018 2:30 AM IST (Updated: 10 May 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே, வெடிகுண்டு வழக்கு குற்றவாளியை தேடி சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே, வெடிகுண்டு வழக்கு குற்றவாளியை தேடி சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

வெடிகுண்டு வீசிய வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலாங்குளத்தை சேர்ந்த சுடலைமாடன் மகன் பெருமாள்சாமி (வயது30). கூலி தொழிலாளி. இவர் மீது ஆத்தூர் போலீஸ் சரகத்தில் கொலை வழக்கு, கொப்பம்பட்டி போலீஸ் சரகத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

வெடிகுண்டு வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் அவரை கொப்பம்பட்டி போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். நேற்று முன்தினம் மதியம் அவர் முடுக்கலாங்குளத்தில் உள்ள வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி

இதை தொடர்ந்து அவரை பிடிக்க கொப்பம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் முடுக்கலாங்குளத்துக்கு சென்றனர். அங்கு பெருமாள்சாமியின் வீடு வெளியே பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வீட்டிற்குள் ஆள் நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

உடனே போலீசார் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் ஒருவர் இருந்தார். அவரை வெளியே வருமாறு போலீசார் அழைத்தனர். ஆத்திரமடைந்த அந்த நபர், அரிவாளுடன் கதவை திறந்து கொண்டு ஆக்ரோஷமாக கத்தியவாறு வெளியே வந்தார். மேலும், வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜை அவர் அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் சுதாரித்துக் கொண்டு ஓடி உயிர் தப்பினார்.

தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை வெட்ட முயன்ற அவருடைய கையில் இருந்த அரிவாள் நழுவி கீழே விழுந்தது. உடனடியாக போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், வீட்டுக்குள் சென்று பெருமாள்சாமி இருக்கிறாரா? என தேடினர். ஆனால் அவர் வீட்டில் இல்லை.

தலைமறைவு குற்றவாளி கைது

இதையடுத்து அந்த நபரை கொப்பம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், வல்லநாடு தெற்கு தெருவைச் சேர்ந்த நூருதீன் மகன் ஜாகீர் உசைன் (50) என்பதும், இவர் மீது தூத்துக்குடி, நெல்லை, பாளையங்கோட்டை போலீஸ் சரகங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் அவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இவர், பெருமாள்சாமியின் நெருங்கிய நண்பர், என தெரியவந்தது. இதையடுத்து ஜாகீர் உசைனை போலீசார் கைது செய்தனர்.

பெருமாள்சாமி எங்கே உள்ளார் என்பது குறித்து ஜாகீர் உசைனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், கொப்பம்பட்டி போலீசார் அவரை, பாளையங்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஜாகீர் உசைனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story