நாளை கோவில்பட்டி வரும் முதல்-அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் வாபஸ் தி.மு.க. கூட்டணி கட்சியினர் அறிவிப்பு
கோவில்பட்டி வருகை தரும் முதல்- அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக, தி.மு.க. கூட்டணி கட்சியினர் அறிவித்து உள்ளனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் அதிகாரிகளுடன் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, நாளை கோவில்பட்டி வருகை தரும் முதல்- அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக, தி.மு.க. கூட்டணி கட்சியினர் அறிவித்து உள்ளனர்.
சமாதான பேச்சுவார்த்தை
கோவில்பட்டியில் 2-வது குடிநீர் திட்டத்தை முழுவதுமாக நிறைவேற்றிய பின்னரே தொடங்கி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்த நகரசபையில் குடிநீர் கட்டண வரி, வீட்டு வரி பல மடங்கு உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், கோவில்பட்டிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வருகை தரும் முதல்- அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தி.மு.க. கூட்டணி கட்சியினர் அறிவித்தனர்.
இதையடுத்து நேற்று மாலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் (பொறுப்பு) செழியன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், தாசில்தார் பரமசிவன், நகரசபை ஆணையாளர் அச்சையா, குடிநீர் வடிகால்வாரிய உதவி பொறியாளர் மணி, நகரசபை பொறியாளர் குருசாமி, தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி, ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இந்திரன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், உமாசங்கர், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டம் வாபஸ்
கூட்டத்தில், கோவில்பட்டி கடலையூர் ரோடு, இளையரசனேந்தல் ரோடு, சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதிக்குள் நிறைவு பெறும். முதல்- அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ள பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவு பெறும். அதுவரையிலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குழாய்களின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.கோவில்பட்டி நகரசபையில் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டண வரி, சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து முதல்- அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தி.மு.க. கூட்டணி கட்சியினர் அறிவித்தனர்.
Related Tags :
Next Story