காலாப்பட்டு தனியார் மருந்து தொழிற்சாலை விவகாரம்: முன்னாள் அமைச்சர் உள்பட 75 பேர் மீது வழக்கு
புதுவை தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் கோஷ்டிகளாக கற்களை வீசி தாக்கியதாக முன்னாள் அமைச்சர் உள்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
காலாப்பட்டு,
புதுவை மாநிலம் காலாப்பட்டில் கிழக்கு கடற்கரை சாலையில் மருந்து, மாத்திரைகள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது. இதுபற்றி தெரியவந்ததை தொடர்ந்து மருந்து தொழிற்சாலையை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அரசு சார்பில் பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கூட்டம் நடத்தாமலேயே கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர்.
இந்தநிலையில் தொழிற்சாலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் திரண்டு வந்தவர்கள் கற்களை வீசி கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்களை கீழே தள்ளி விட்டு சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து சமரசத்துக்கு முயன்ற போலீசார் மீதும் கல்வீசப்பட்டது. இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் அவர்கள் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம், வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ஜோசப் மற்றும் செல்வகுமார், வேலு, பிரகாஷ், ஆனந்த் உள்பட 75 பேர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இ.பி.கோ. 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 147 (கும்பலாக வந்து கலவரத்தை ஏற்படுத்துதல்), 148 (ஆயுதங்களுடன் வருதல்), 188 (அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 132 (அரசு ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துதல்), 133 (கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story