போக்குவரத்து போலீஸ்காரர்கள் 2 பேர் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை
வாகன சோதனையில் வசூலித்த பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட தகராறில் போக்குவரத்து போலீஸ்காரர்கள் 2 பேர் நேற்று நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
தாம்பரம்,
சென்னை நீலாங்கரை போக்குவரத்து பிரிவு போலீஸ் தலைமை காவலராக இருப்பவர் ஜான்புரூஸ்லி(வயது45), அதே போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக இருப்பவர் சிவக்குமார்(40). இவர்கள் 2 பேரும் நேற்று காலை நீலாங்கரை போலீஸ் சரக பகுதியான சென்னை-கோவளம் கிழக்குகடற்கரை சாலையில் பாலவாக்கம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்கள் 2 பேரும் அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். அவ்வாறு சோதனை செய்தபோது அபராதம் என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் இருந்து பணத்தை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. பல மணி நேரம் இந்த சோதனையை அவர்கள் நடத்தினர்.
2 போலீசார் கட்டிப்புரண்டு சண்டை
பின்னர் அவர்கள் அந்த சாலையில் உள்ள ஒரு மரத்தடிக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலித்த பணத்தை பங்கு போட்டனர். அப்போது பணத்தை பிரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் பணத்தை பங்கு வைப்பது தொடர்பாக இருவரும் ஒருவரையொருவர் தாக்கினர். அப்போது நடுரோடு என்றும் பார்க்காமல் போலீஸ்காரர்கள் 2 பேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
வேடிக்கை பார்த்த பொதுமக்கள்
நடுரோட்டில் சீருடையுடன் 2 போலீஸ்காரர்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்டதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். ஆனாலும் அதனை கண்டு கொள்ளாத போலீஸ்காரர்கள் தீவிரமாக மோதிக்கொண்டனர். இதில் தலைமை காவலர் ஜான்புரூஸ்லியின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.
இதைத்தொடர்ந்து வேடிக்கை பார்த்த பொதுமக்கள் சண்டை போட்ட 2 போலீஸ்காரர்களையும் பிரித்து விட்டனர். பின்னர் இதுபற்றி நீலாங்கரை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நீலாங்கரை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சண்டை போட்ட 2 போலீஸ்காரர்களையும் விசாரிப்பதாக கூறி அங்கு இருந்து அவசரமாக அழைத்து சென்றார்.
Related Tags :
Next Story