தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம்


தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 10 May 2018 4:00 AM IST (Updated: 10 May 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக -கர்நாடக எல்லையில் இன்று (வியாழக்கிழமை) முற்றுகை போராட்டம் நடக்கிறது.

ஈரோடு

தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் ஈரோடு கொங்கு கலை அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமி தலைமை தாங்கி பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* கீழ்பவானி ஒற்றைப்படை மதகுகளுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர்திறந்து விட அரசாணை பிறப்பித்த தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், பரிந்துரை செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோருக்கும், சிறப்பாக தண்ணீரை முறைப்படுத்தி பகிர்ந்தளித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டருக்கும் நன்றி.

* சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் இன்று (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தமிழக -கர்நாடக எல்லைப்பகுதியான சுஜில்வாடியில் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

* பவானிசாகர் அணை நீர், ஈரோடு மாவட்ட மக்களுக்கு பற்றாக்குறையாக உள்ளதால் பாண்டியாறு-மேயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பவானிக்கு வருகிற 13-ந்தேதி வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக கொடுப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் கொடுமுடி ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, மாநில இளைஞர் அணி செயலாளர் வேலுச்சாமி, ஈரோடு ஒன்றிய தலைவர் இளையாகவுண்டர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Next Story