திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர் பகுதிகளில் தடையை மீறி கடலில் குளிப்பதால் அதிகரிக்கும் உயிர் பலி
திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர் பகுதிகளில் தடையை மீறி கடலில் குளிப்பதால் ஏற்படும் உயிர் பலி அதிகரித்து வருகிறது.
திருவொற்றியூர்,
வட சென்னையில் உள்ள திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர் ஆகிய கடலோர பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்க ராட்சத கற்களை கொட்டி கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் கடலுக்குள் பல மீட்டர் தூரம் கற்களை கொட்டி தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டு பெருமளவில் கடல் அரிப்பு தடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கடற்கரையோரங்களில் பல இடங்களில் ஆழமாக உள்ளது. சில இடங்களில் மணல் திட்டுக்கள் ஏற்பட்டுள்ளது. எனவே காசிமேடு செரியன்நகர், அண்ணாநகர், திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம், எண்ணூர் ராமகிருஷ்ணாநகர், தாழங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், கத்திரி வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலும் மேற்கூறிய கடற்கரை பகுதிகளுக்கு மாலை நேரங்களில் வட சென்னையின் பல பகுதிகளில் இருந்து சிறுவர்கள், பெரியவர்கள் என மக்கள் திரளாக வருகின்றனர்.
அதிக உயிர் பலி
மேலும் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் தடையை மீறி கடலில் இறங்கி குளிக்கின்றனர். அதோடு மாணவர்கள் சிலர் பெற்றோருக்கு தெரியாமல் நண்பர்களுடன் சேர்ந்து வந்து கடலில் குளிக்கிறபோது ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பலியாகும் சம்பவங்களும் நடக்கின்றன.
அதே போல் கடலுக்கு நடுவில் போடப்பட்டுள்ள தூண்டில் வளைவு மீது ஏறி சென்று அங்கிருந்து கடலில் குதித்து குளிக்கும் போது தூண்டில் வளைவு அருகே சேர்ந்துள்ள மணலில் சிக்கியும் சிலர் உயிர் இழந்து உள்ளனர்.
அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக போலீஸ் தரப்பில் வைக்கப்படும் எச்சரிக்கை பலகைகளை விஷமிகள் சிலர் உடைத்து எரிந்து விடுகின்றனர்.
இதனால் அப்பாவி பொதுமக்கள் ஆபத்து குறித்து அறியாமல் கடலில் இறங்கி குளிக்கிறபோது, கடல் அரிப்பை தடுக்க போடப்பட்டுள்ள கற்குவியலுக்குள் சிக்கியும், ராட்சத அலைகளில் சிக்கியும் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது.
ரோந்து பணியில்...
இது பற்றி எண்ணூர் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்த மீனவர் பால்சாமி என்பவர் கூறியதாவது:-
வடசென்னை பகுதிகளை சேர்ந்தவர்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இங்கு உள்ள கடற்கரை பகுதிகளுக்கு வருகின்றனர். அந்த சமயத்தில் அவர்கள் கடலில் இறங்கி குளிக்கிறபோது ராட்சத அலைகளில் சிக்கி பலியாகின்றனர்.
தடை செய்யப்பட்ட பகுதி என தெரிந்தும் மக்கள் கடலில் இறங்கி குளிப்பதால் போலீசாரோ, கடலோர காவல் படையினரோ அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் உயிர் பலி அதிகரித்துக்கொண்டே போகிறது.
எனவே போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் தொடர்ச்சியாக ரோந்து பணியில் ஈடுபட்டு தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் குளிப்பதை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் அமர்ந்து பேசுவதற்கு ஏதுவாக கடற்கரை பகுதிகளில் இருக்கைகள் அமைத்திட வேண்டும் என்பதே வடசென்னை பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story