சென்னிமலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


சென்னிமலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 May 2018 4:15 AM IST (Updated: 10 May 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னிமலை

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நடுக்கஞ்சன்கொல்லை நேரு நகரை சேர்ந்தவர் அழகேசன். இவருக்கு செல்வராணி, ஜெயராணி என 2 மனைவிகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அக்கா-தங்கை ஆவர். அழகேசனின் முதல் மனைவியான செல்வராணி ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள பாரதி நகரில் தனியாருக்கு சொந்தமான நூல் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

செல்வராணியுடன் அவரது தங்கை ஜெயராணியின் மகன் அழகுவீரன் (வயது 19) என்பவரும் தங்கியிருந்து அதே நூல் மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் அழகுவீரன் நூல் மில்லிற்கு வேலைக்கு சென்றார்.

பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு செல்கிறேன் என கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால் வீட்டிற்கு செல்லாமல் நூல் மில் அருகிலேயே இருந்த காலி அட்டை வைத்திருந்த குடோனில் நைலான் கயிற்றால் அழகுவீரன் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த அங்கிருந்த பணியாளர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அழகுவீரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுவீரனின் தற்கொலைக்கான காரணம் என்ன? காதல் தோல்வியா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story