மோட்டார்சைக்கிள் விபத்தில் அரசு ஊழியர் சாவு டாக்டர் பணியில் இல்லாததால் இறந்ததாக கூறி மறியல் போக்குவரத்து பாதிப்பு
மோட்டார்சைக்கிள் விபத்தில் அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார். முதலுதவி சிகிச்சை அளிக்க டாக்டர் பணியில் இல்லாததால் இறந்ததாக கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் கிராமம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 39). மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வெள்ளியூர் நீரேற்றும் தளத்தில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற லாரி ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் சாலை தடுப்பை தாண்டி எதிர் திசையில் சென்ற சேகர் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சேகரை கிராமமக்கள் மீட்டு வெள்ளியூர் அரசினர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
ஆனால், பணியில் இருக்க வேண்டிய டாக்டர் யுவராஜ் முன் கூட்டியே வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் உயிருக்கு போராடிய சேகருக்கு சிகிச்சை அளிக்கவில்லை. பின்னர், கிராமமக்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்தார்.
மறியல்
இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு சேகரின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு அவரது உறவினர்களுக்கு வெங்கல் போலீசார் தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மாலை முதலுதவி சிகிச்சை அளிக்காததால் சேகர் இறந்து விட்டார். அரசு மேம்படுத்தப்பட்ட ஆஸ்பத்திரியில் பணியில் இருக்கவேண்டிய டாக்டர்கள் இதேபோல் முன்கூட்டியே வீட்டுக்கு சென்று விடுகின்றனர். எனவேதான் தற்போது சேகர் இறந்தார். இதற்கு முன்பும் பலமுறை பலர் இறந்துள்ளனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்ற டாக்டரை உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும்.இறந்த சேகர் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் ,விதியை மீறி எதிர் திசையில் ஓட்டி வந்த லாரி டிரைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கிராமமக்கள் திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் வெள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நேற்று காலை 11 மணிக்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வெங்கல் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பிரபாகரன், திருவள்ளூர் துணை தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
சம்பவத்தன்று பணியில் இல்லாத டாக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும், 24 மணி நேரமும் வெள்ளியூர் ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் பணியில் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினர்.
இதன் பின்னர்,கிராமமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலியான சேகருக்கு தேவகி என்ற மனைவியும், சர்மா, சாரதி என்ற மகன்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story