குழந்தை கடத்தும் கும்பல் நுழைந்ததாக உருட்டுக்கட்டைகளுடன் விடிய விடிய தேடுதலில் ஈடுபட்ட வாலிபர்கள்


குழந்தை கடத்தும் கும்பல் நுழைந்ததாக உருட்டுக்கட்டைகளுடன் விடிய விடிய தேடுதலில் ஈடுபட்ட வாலிபர்கள்
x
தினத்தந்தி 10 May 2018 3:40 AM IST (Updated: 10 May 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை கடத்தல் கும்பல் நுழைந்ததாக வாலிபர்கள் உருட்டுக்கட்டைகளுடன் விடிய விடிய தேடுதலில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை, 

ஊத்துக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக 2 நாட்களுக்கு முன் தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும், யாராவது சந்தேகிக்கும் வகையில் நடமாடினால் அருகே உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர அவர்கள் மீது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட கூடாது என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் பகுதியில் செங்குன்றத்தை சேர்ந்த நந்தினி (வயது 25) என்ற திருநங்கை கடை கடையாக சென்று காசு கேட்ட போது அவர் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று எண்ணி அங்குள்ளோர் அடித்து உதைத்தனர். தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று நந்தினியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் இல்லை என்று விசாரணையில் தெரிந்ததால் அவரை அனுப்பி வைத்தனர்.

உருட்டுக்கட்டைகளுடன் வாலிபர்கள்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் நுழைந்ததாக வதந்தி பரவியது. இது உண்மை என்று நினைத்து அந்த பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதையொட்டி அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் உருட்டுக்கட்டைகளுடன் அண்ணாநகர், அய்யனார்நகர், நாகலாபுரம் ரோடு, திருவள்ளூர் ரோடு போன்ற பகுதிகளில் விடிய விடிய தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அண்ணாநகர் பகுதியில் உள்ள முள்புதரில் ஏதோ சத்தம் வந்தது. இதைடுத்து குழந்தை கடத்தும் கும்பல் முள்புதரில் மறைந்திருக்கலாம் என்று எண்ணி மண்எண்ணெய் ஊற்றி முள்புதருக்கு தீ வைத்தனர்.

குழந்தை கடத்தல் கும்பல் பற்றி வதந்திகள் பரவி வரும் நிலையில் இரவு நேரங்களில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story