தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2018 4:30 AM IST (Updated: 10 May 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்

விருத்தாசலம் அருகே சத்தியவாடி கிராமம் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து மின்மோட்டார்கள் மூலம் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு தினந்தோறும் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

1971-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முறையான பராமரிப்பின்றி தற்போது முற்றிலும் சேதமடைந்து போனது. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஊராட்சி நிர்வாகம் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்ட முடிவு செய்தது.

அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் மின் மோட்டார்களை இயக்கி ஆழ்துளை கிணறுகளில் குடிநீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

மின் தடை நேரங்களில் கிராம மக்கள் பெரும் சிரமங்களுக்கு இடையே அருகில் உள்ள வயல்களுக்கு நடந்து சென்று தொட்டிகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து வந்து, அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக இக்கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் அங்குள்ள ஊராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஊரக வளர்ச்சித்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குடிநீர் பிரச்சினை பற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story