மனைவியுடன் தொழில்அதிபர் விஷம் குடித்து தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
தர்மஸ்தலாவில் உள்ள தங்கும் விடுதி அறையில் தொழில்அதிபர் தனது மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு,
தர்மஸ்தலாவில் உள்ள தங்கும் விடுதி அறையில் தொழில்அதிபர் தனது மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அந்த அறையில் இருந்து உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது.
தொழில்அதிபர்
ஹாவேரி மாவட்டம் பேடகியை சேர்ந்தவர் மிருத்தன் ஜெயா(வயது 60). தொழில்அதிபர். இவர் வர்த்தக சங்க தலைவராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில், மிருத்தன் ஜெயா தனது மனைவி நேத்ராவதியுடன் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.
இதையடுத்து மிருத்தன் ஜெயாவும், அவருடைய மனைவி நேத்ராவதியும் தர்மஸ்தலா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அந்தப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை.
விஷம் குடித்து தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், அறையின் கதவை தட்டினார்கள். வெகு நேரமாக தட்டியும் கதவு திறக்கவில்லை. இதனால் மேலும் சந்தேகமடைந்த அவர்கள் உடனடியாக தர்மஸ்தலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் மிருத்தன் ஜெயா தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது விடுதி அறையில், மிருத்தன் ஜெயாவும், நேத்ராவதியும் வாயில் நுரை தள்ளியப்படி பிணமாக கிடந்தனர்.
இதனை பார்த்து போலீசாரும், விடுதி ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், பிணமாக கிடந்த 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பெல்தங்கடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, மிருத்தன் ஜெயாவும், நேத்ராவதியும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
முன்னதாக, அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து உருக்கமான கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருந்தது என்பதை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அவர்கள் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டனர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தர்மஸ்தலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story