பா.ஜனதாவின் ஒரே மொழி, ஒரே மத கொள்கை இந்திய கலாசாரத்துக்கு ஏற்றது அல்ல முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேட்டி


பா.ஜனதாவின் ஒரே மொழி, ஒரே மத கொள்கை இந்திய கலாசாரத்துக்கு ஏற்றது அல்ல முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேட்டி
x
தினத்தந்தி 10 May 2018 4:08 AM IST (Updated: 10 May 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவின் ஒரே மொழி, ஒரே மத கொள்கை இந்திய கலாசாரத்துக்கு ஏற்றது அல்ல என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மங்களூரு, 

பா.ஜனதாவின் ஒரே மொழி, ஒரே மத கொள்கை இந்திய கலாசாரத்துக்கு ஏற்றது அல்ல என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரி

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் காங்கிரசை ஆதரித்து நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சி வெற்றியை பறிகொடுத்தது. தற்போது பா.ஜனதாவினர் காங்கிரஸ் மீது அவதூறு பிரசாரம் செய்து வருகின்றனர். பா.ஜனதா ஆட்சியில் 5 ஆண்டு காலத்தில் 3 பேர் பதவி வகித்தனர். இது கர்நாடகத்தில் மோசமான அரசியல் வரலாறு ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் முதல்-மந்திரி சித்தராமையா திறமையான ஆட்சியை நடத்தியுள்ளார். இதனால் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜனதாவும் நாட்டின் தலையெழுத்தை மாற்றுவதாக கூறி சட்டத்திட்டங்களை கொண்டு வருகின்றனர்.

நிலையான ஆட்சி நிர்வாகத்துக்கு...

இந்த சட்டத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராக உள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரிவை ஆதரித்து பா.ஜனதா செயல்படுகிறது. ஒரே மதம், ஒரே மொழி கொள்கையை பா.ஜனதா ஆதரிக்கிறது. இது நமது இந்திய கலாசாரத்திற்கு ஏற்றது அல்ல. கர்நாடக தேர்தலை மூலதனமாக வைத்து பா.ஜனதா தென்இந்தியாவில் நுழைய திட்டமிட்டுள்ளது. அவ்வாறு நடந்தால், தென்இந்தியாவுக்கு மோசமான விளைவாக இருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை சரியாக பயன்படுத்த வேண்டும். அவருடைய பேச்சுகளும், அறிக்கைகளும் மார்ஷல் கரியப்பா, ஜெனரல் திம்மையாவை தவறாக பேசுவதாக அமைகிறது. அவர்கள் மதிப்புமிக்கவர்கள் என்பது பா.ஜனதாவினருக்கு தெரியாதா?. பெட்ரோல், டீசல் விலையை சரக்கு-சேவை வரிக்குள் கொண்டு வரவேண்டும். நிலையான ஆட்சி நிர்வாகத்துக்கு அனைவரும் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்.

வளர்ச்சி விகிதம் உயர்வு

கர்நாடக தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் நல்ல முறையில் உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்புகள், விவசாய நலத்திட்டங்கள் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கர்நாடக வரலாற்றில் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி தேவராஜ் அர்சுக்கு பிறகு தனது 5 ஆண்டு ஆட்சிகாலத்தை முழுமையாக பூர்த்தி செய்தவர் சித்தராமையா தான்.

ஊழல், கற்பழிப்பு போன்றவை தான் பா.ஜனதாவின் சாதனை. கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகளை காங்கிரஸ் அரசு செய்து உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் பல இடங்களில் நடந்த கலவரங்களை போலீசார் கட்டுப்படுத்தினர். போலீசார் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story