சின்னமுட்டத்தில் மீனவர்கள் மோதல்; வீடுகள் மீது கல்வீச்சு- 5 பேர் காயம் போலீஸ் குவிப்பு


சின்னமுட்டத்தில் மீனவர்கள் மோதல்; வீடுகள் மீது கல்வீச்சு- 5 பேர் காயம் போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 11 May 2018 3:45 AM IST (Updated: 11 May 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

சின்னமுட்டத்தில் மீனவர்கள் இடையே நேற்று இரவு திடீர் மோதல் ஏற்பட்டதில் 5 பேர் காயம் அடைந்தனர். வீடுகள் மீதும் கற்கள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி சின்னமுட் டம் கடற்கரை பகுதியாகும். அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு பேரவைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதுதொடர்பாக இருதரப்பு மீனவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த இருதரப்பு மீனவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 2 கோஷ்டியினரும் மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். வீடுகள் மீதும் கற்களை வீசினர். இதனால் சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். அந்த இடமே திடீர் போர்க்களமாகி பரபரப்பு நிலவியது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோதலில் ஈடுபட்ட 2 கோஷ்டியினரையும் தடுத்தனர்.

இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மோதல் தொடர்பாக சிலரை மடக்கி பிடித்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். எனினும் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story