மாவட்ட செய்திகள்

குழந்தை கடத்தல் வதந்தியை தடுக்க ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு + "||" + A police inspector has been ordered by the police to prevent rumors of kidnapping

குழந்தை கடத்தல் வதந்தியை தடுக்க ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

குழந்தை கடத்தல் வதந்தியை தடுக்க ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் வதந்தியை தடுக்க ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தலா 5 ஆட்டோக்கள் மூலம் அந்தந்த பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்,

வடமாநிலங்களில் இருந்து சுமார் 200 பேர் கொண்ட கும்பல் குழந்தைகளை கடத்தி செல்வதற்காக தமிழ்நாட்டில் ஊடுருவி இருப்பதாக ‘வாட்ஸ்-அப்’பில் கடந்த மாதம் தகவல் பரவியது. இதனை பார்த்த அனைவரும் முதலில் வதந்தி என்றே நம்பினர். ஆனால் இத்தகவல் தொடர்ந்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்தது. எனவே பொதுமக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டது.

அதன்காரணமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி வடமாநில வாலிபர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் போளூர் அருகே சாமி தரிசனம் செய்ய சென்ற சென்னையை சேர்ந்த மூதாட்டி ருக்மணி அம்மாள் அடித்து கொலை செய்யப்பட்டார். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை அருகே வடமாநில வாலிபர் ஒருவரும், சோளிங்கரில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண்ணும் தாக்கப்பட்டனர்.

இத்தகைய தொடர் சம்பவங்களை தடுக்கும்வகையில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமையில் நடந்தது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் என வடமாநில வாலிபர்கள், அப்பாவி பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்கள் சுற்றி திரிந்தால், அவர்கள் குறித்து உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களை தாக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொள்ள கூடாது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தலா 5 ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் இதுதொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகிக்க வேண்டும். குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்பாவி மக்களை தாக்குபவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என அறிவுறுத்த வேண்டும். அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தலா 5 ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆட்டோக்களில் போலீசார் ஒலிப்பெருக்கி மூலமாக குழந்தை கடத்தல் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையம், மார்க்கெட், ரெயில் நிலையங்களில் இதுதொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. துண்டு பிரசுரத்தில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் சுற்றி திரியும் நபர்கள் குறித்து அந்தந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அவர்களை பிடித்து தாக்கக் கூடாது, அப்பாவி மக்களை தாக்கினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அதில் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்போன் எண்கள், போலீஸ் நிலைய தொலைபேசி எண்கள் இடம் பெற்றிருந்தன.