தீ விபத்து: 6 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு


தீ விபத்து: 6 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 May 2018 4:30 AM IST (Updated: 11 May 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

மங்கலம்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 கூரை வீடுகள் எரிந்து சாம்பலாகின. அப்போது சிலிண்டர் ஒன்று வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் ஹவ்பமா(வயது 40). இவரது கூரை வீடு நேற்று திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்தபடி, வெளியே ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென அருகில் இருந்த நசீமா(35), பாத்திமாபீவி(42), கமருன்னிஷா(55), நர்கிஸ்பானு(30), சைதாபிவி(42) ஆகியோரின் கூரை வீடுகளுக்கும் பரவியது. அப்போது பாத்திமா பீவி என்பவருடைய வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

நிவாரண உதவி

இதுகுறித்த தகவல் அறிந்த மங்கலம்பேட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 6 வீடுகளில் இருந்த பணம், நகைகள், மின்சாதன பொருட்கள், கல்வி சான்றிதழ்கள், வீட்டுப்பத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்த தகவல் அறிந்த தாசில்தார் ஸ்ரீதரன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயகோபி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அரசின் நிவாரண உதவிகளை வழங்கினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story