மதுரவாயலில் 16-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலி


மதுரவாயலில் 16-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலி
x
தினத்தந்தி 10 May 2018 9:10 PM GMT (Updated: 10 May 2018 9:10 PM GMT)

மதுரவாயலில் 16-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழந்தார்.

பூந்தமல்லி, 

மதுரவாயலில் தாம்பரம்-புழல் பைபாஸ் சாலையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான 16 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள 6-வது மாடியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மகன் சிபிசக்ரவர்த்தி (வயது 18). பிளஸ்-2 முடித்துள்ள இவர், ‘நீட்’ தேர்வு எழுதி உள்ளார்.

மாடியில் இருந்து விழுந்து பலி

இந்தநிலையில் நேற்று இரவு தனது நண்பர் ஒருவருடன் சிபிசக்ரவர்த்தி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 16-வது மாடிக்கு சென்றார். அப்போது திடீரென கால் தவறி சிபிசக்ரவர்த்தி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இதனைக்கண்டதும் அந்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

ஜன்னல் வழியாக...

சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிலர் மொட்டை மாடிக்கு சென்று சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே மொட்டை மாடிக்கு செல்லும் வழியை குடியிருப்புவாசிகள் பூட்டி வைத்துள்ளனர்.

ஆனால் உயிரிழந்த சிபிசக்ரவர்த்தி மற்றும் அவரது நண்பர் மொட்டை மாடிக்கு ஜன்னல் வழியாக செல்ல முயன்றுள்ளனர். அப்போது கால் தவறி கீழே விழுந்து சிபிசக்ரவர்த்தி இறந்து போய் இருப்பது தெரியவந்துள்ளது.

இருவரும் எதற்காக மொட்டை மாடிக்கு சென்றார்கள்? என்பது குறித்து அவரது நண்பரிடம் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர். 

Next Story