கத்திரி வெயிலிலும் மண்பானை விற்பனை தேக்கம் வியாபாரிகள் வேதனை


கத்திரி வெயிலிலும் மண்பானை விற்பனை தேக்கம் வியாபாரிகள் வேதனை
x
தினத்தந்தி 11 May 2018 4:45 AM IST (Updated: 11 May 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

கத்திரி வெயிலிலும் மண்பானைகள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகாமல் உள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

திரு.வி.க. நகர், 

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுத்து மக்களை பாடாய் படுத்தி வருகிறது. அக்கினியின் கோரப்பிடியை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மட்டுமின்றி, பழச்சாறுகள், குளிர்பானங்களையும் பருகி வருகின்றனர்.

வீடுகளில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த தண்ணீரை அதிகம் பருகுவதன் மூலம் தொண்டை வலி, சளி, இருமலை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. இதனால் பலர் இயற்கையாகவே தண்ணீரை குளிர்விக்க பயன்படும் மண்பானைகளில் நீரை ஊற்றி பருகி வருகின்றனர்.

குளிர்சாதன பெட்டியில் உள்ள குளிர்ந்த நீரை விட மண்பானையில் உள்ள தண்ணீரை பருகலாம் என மருத்துவர்களும் பரிந்துரைப்பதால் அனைவரும் மண்பானையை நோக்கி ஓடுகின்றனர். இதனால் கோடை காலத்தில் மண்பானை விற்பனை களைகட்டும்.

லாபம் இல்லை

இந்தநிலையில் சென்னை பெரம்பூரை அடுத்த பெரவள்ளூர் 70 அடி சாலையில் கடந்த 40 வருடங்களாக 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்பானை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு மண்பானை விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

மண்பானை விற்பனை தேக்கமடைவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து மண்பானை விற்பனை செய்து வரும் கபாலி(வயது 60) என்பவர் கூறியதாவது:-

செங்குன்றத்தை அடுத்த ஆரணி, பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் சூளை அமைத்து பலர் மண்பானை தயாரித்து மொத்தமாக விற்கின்றனர். நாங்கள் அவர்களிடம் இருந்து பானைகளை வாங்கி இங்கே(பெரவள்ளூர் 70 அடி சாலையில்) வைத்து விற்கிறோம். மற்ற இடங்களில் இருந்து வாங்கி விற்பதால் எங்களுக்கு போதுமான லாபம் கிடைப்பதில்லை.

விற்பனை மந்தம்

மேலும் லாரிகளில் ஏற்றி இறக்கும்போது 25 சதவீத பானைகள் உடைந்து விடுவதால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியதுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மண்பானை விற்பனை மிகவும் குறைவாக உள்ளது.

செயற்கை குளிர்சாதன பெட்டிகளை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கும் மக்கள் எங்களிடம் மண்பானைகளை குறைந்த விலைக்கு பேரம் பேசுகின்றனர். குளிர்சாதனை பெட்டியில் வைக்கப்பட்ட தண்ணீரை விட மண்பனை நீர் உடலுக்கு மிகவும் நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் பிரபாகரன்(40) என்பவர் கூறியதாவது:-

சிறு வயது முதல் நானும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். குடும்ப தொழிலாக இதனை செய்து வருகிறோம். கோடை காலங்கள், முகூர்த்த நாட்கள் மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டும் மண்பானை விற்பனை இருக்கும். தற்போது கத்திரி வெயிலை முன்னிட்டு விற்பனை சூடுபிடிக்கும் நினைத்தாலும் விற்பனை மந்தமாகவே உள்ளது.

வியாபாரிகள் வேண்டுகோள்

மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப தற்போது மண்பானை மட்டுமின்றி, களிமண்ணால் செய்யப்பட்ட கடாய், பிளாஸ்க் போன்ற வடிவமுடைய தண்ணீர் கேன் என பல்வேறு விதங்களில் வடிவமைத்து விற்பனை செய்து வருகிறோம்.

பாண்டிசேரியில் இருந்து கொண்டு வரப்படும் தூய்மையான மிகவும் சுத்தகரிக்கபட்ட மெல்லிய களிமண்ணை கொண்டு இந்த பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தற்போது மண்பானை விற்பனையை விட களிமண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில் போன்ற பலவித வடிவமுடைய பாத்திரங்களையே மக்கள் அதிகம் வாங்க விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நவீன யுகத்தில் சந்தைக்கு புதியதாக அறிமுகப்படுத்தும் பொருட்களை வாங்கும் மக்கள் நன்மை பயக்கக்கூடிய மண்பானைகளையும் வாங்கி, தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே வியாபாரிகளின் வேண்டுகோளாக உள்ளது. 

Next Story