சித்ரதுர்கா அருகே ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் வீட்டில் வருமானவரி சோதனை ரூ.11 லட்சம் பறிமுதல்


சித்ரதுர்கா அருகே ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் வீட்டில் வருமானவரி சோதனை ரூ.11 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 May 2018 3:15 AM IST (Updated: 11 May 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்கா அருகே ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.11½ லட்சத்தை பறிமுதல் செய்தார்கள்.

சித்ரதுர்கா, 

சித்ரதுர்கா அருகே ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.11½ லட்சத்தை பறிமுதல் செய்தார்கள்.

ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்

சித்ரதுர்கா மாவட்டம், சித்ரதுர்கா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடுபவர் வீரேந்திரா. இவர், தனது குடும்பத்தினருடன் சித்ரதுர்கா புறநகர் திரதாளாவில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேட்பாளர் வீரேந்திராவின் வீட்டிற்கு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் சென்றார்கள். பின்னர் அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை நேற்று அதிகாலை 4 மணிவரை நடைபெற்றது.

அந்த சந்தர்ப்பத்தில் வீரேந்திராவும் வீட்டில் தான் இருந்தார். விடிய, விடிய நடந்த இந்த சோதனையின் போது அவரது வீட்டில் ரூ.11½ லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபற்றி அவரிடம் அதிகாரிகள் விசாரித்த போது சரியான பதில் சொல்லவில்லை. இதையடுத்து, வீரேந்திராவிடம் இருந்து ரூ.11½ லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றார்கள்.

காங்கிரஸ் பிரமுகர்

இதுபோல, கதக் மாவட்டம் கலசாபுரா கிராமத்தை சேர்ந்தவர் குரண்ணா பலகானூரு, காங்கிரஸ் பிரமுகர். இவர் மந்திரி எச்.கே.பட்டீலின் நெருங்கிய ஆதரவாளர்கள் ஆவார். இந்த நிலையில், நேற்று குரண்ணா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது வீட்டில் இருந்து பணம், பிற ஆவணங்கள் சிக்கியதாகவும், அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை(சனிக்கிழமை) நடைபெற உள்ள நிலையில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் சித்ரதுர்கா, கதக்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story