விபத்துகளை தவிர்க்க வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது கலெக்டர் அறிவுரை


விபத்துகளை தவிர்க்க வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 10 May 2018 10:16 PM GMT (Updated: 10 May 2018 10:16 PM GMT)

விபத்துக்களை தவிர்க்க வாகனங்கள் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது என்று கலெக்டர் அறிவுரை கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் திருப்பூர்-காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் உள்ள கூட்ட அரங்கில் திருப்பூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- நாளுக்கு நாள் விபத்து அதிகரித்து வருகிறது. நாம் மட்டும் வாகனத்தை ஒழுங்காக ஓட்டுகிறோம் என்ற நிலையில் இல்லாமல் நம்மை கடந்து செல்பவர்களும், எதிரே வருபவர்களும் சரியாக வருகிறார்களா? என்பதை அறிந்து வாகனம் ஓட்ட வேண்டும். அதிக முன் அனுபவம் இருந்தாலும் எதிரே வரும் வாகன ஓட்டிகளும் சரியாக வந்தால் தான் விபத்தை 100 சதவீதம் தவிர்க்க முடியும்.

முழுமையாக தவிர்க்கலாம்

மேலும், டிரைவர்களின் சிறு, சிறு, தவறுகளாலேயே அதிக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உருவாகிறது. வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பேசுவதை டிரைவர்கள் தவிர்க்க வேண்டும். டிரைவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு சாலை விபத்துக்களை முழுமையாக தவிர்த்து நமது மாவட்டம் விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, சாலை விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை பஸ் டிரைவர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முருகானந்தம் (திருப்பூர் தெற்கு), ரஜினிகாந்த் (திருப்பூர் வடக்கு), போலீஸ் உதவி கமிஷனர் ராஜ்கண்ணா, மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் தமிழரசு, அசோக் லைலாண்ட் பயிற்சி நிறுவன அலுவலர் பாலசுப்பிரமணியம், வாகன ஆய்வாளர்கள் பாஸ்கரன், கோகுலகிருஷ்ணன், பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story