சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை தொடங்குகிறது
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் வருகிறது. இதையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் மலர் கண்காட்சி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. 1896-ம் ஆண்டு தாவரவியல் பூங்காவில் முதல் முதலாக மலர் கண்காட்சி நடந்தது. கடந்த 1980-ம் ஆண்டு முதல் தமிழக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 1995-ம் ஆண்டு மே மாதம் 100-வது மலர் கண்காட்சி பூங்காவில் நடைபெற்றது. அப்போது ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்காவை முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த பூங்கா 4.40 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. சரிவான பகுதி மற்றும் 5 உபரிகையில் (டெரஸ்) 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த 38 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நிலா மாடம்
ஊட்டி ரோஜா பூங்காவின் நுழைவுவாயில் பகுதியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது கையால் நட்டு வைத்த ரோஜா செடி இன்றும் உள்ளது. அந்த செடிக்கு ஜெயலலிதா என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இதுதவிர வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ரோஜா செடிகளும் காணப் படுகின்றன. உலக ரோஜா சம்மேளனம் கடந்த 2006-ம் ஆண்டு விசேஷ ரோஜா மலர்கள் மற்றும் இந்தியாவிலேயே சிறந்த பூங்காவுக்கான விருதை ஊட்டி ரோஜா பூங்காவுக்கு வழங்கியது.
சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் நுழைந்ததுமே, அவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகிறது. அங்குள்ள 4 காட்சி முனையில் நின்று பூங்காவின் பல்வேறு பகுதிகளை கண்டு களிக்கலாம். சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க குடை போன்ற நிழற்குடைகள், நிலாமாடம் ஆகியவை உள்ளன.
பூத்து குலுங்குகிறது
பூங்கா முழுவதும் இறக்கமாகவே காணப்படும். அங்கு பாரம்பரிய ரோஜா பிரிவு ஒன்று ஏற்படுத்தப் பட்டு உள்ளது. மேலும் அலங்கார செடிகள் மற்றும் ரோஜா செடிகள் புதிய வடிவங்களில் அமைக்கப் பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.
ரோஜா செடிகளில் இலைகள் மட்டுமே பச்சை நிறத்தில் இருப்பதை பார்த்து இருப்போம். ஆனால், பூங்காவில் பச்சை நிறத்தில் உள்ள ரோஜாவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் பன்னீர் ரோஜா, பட்டன் ரோஸ் மற்றும் நீலம், சிவப்பு, வெள்ளை, மஞ்சள் உள்பட பல்வேறு நிறங்களில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய மூன்று நிறங்கள் கலந்த மலர்களும் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களை கண்டு ரசிப்பதோடு, அதை தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.
கண்காட்சி நாளை தொடங்குகிறது
கோடை சீசனையொட்டி இந்த ஆண்டு கோத்தகிரி நேரு பூங்காவில் கடந்த 5-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் நாளை (சனிக்கிழமை) 16-வது ரோஜா கண்காட்சி தொடங்குகிறது. இதை காலை 10.30 மணிக்கு வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தொடங்கி வைக்கிறார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்குகிறார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையன் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) கண்காட்சி நடக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் ரோஜா கண்காட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா மலர்களை கொண்டு இந்திய நுழைவு வாயில், மயில், ஜல்லிக்கட்டு காளை உள்பட பல்வேறு அலங்கார உருவங்கள் வைக்கப்பட உள்ளன. மதுரை, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறை சார்பில் ரோஜா மலர் அலங்கார உருவங்களும் வைக்கப்பட உள்ளன. கண்காட்சியையொட்டி பூங்காவில் அரங்குகள் மற்றும் அலங்காரங்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story