பாலக்கோடு அருகே 5 வயது மகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தாய் தற்கொலை


பாலக்கோடு அருகே 5 வயது மகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தாய் தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2018 10:48 AM IST (Updated: 11 May 2018 10:48 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே குடும்பத் தகராறில் மகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தாய் தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மணியகாரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40), விவசாயி. இவருடைய மனைவி கலைச்செல்வி (35). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு தனஸ்ரீ (5) என்ற மகள் இருந்தாள். கடந்த 2 ஆண்டாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கலைச்செல்வி கணவனிடம் கோபித்து கொண்டு மொரப்பூர் அருகே சிந்தல்பாடி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவதும், பின்னர் சீனிவாசன், மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதும் வழக்கம். தொடர்ந்து சீனிவாசன் மனைவியிடம், ‘உன்னை பிடிக்கவில்லை. நீ செத்து விட்டால் நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்வேன்’ எனக் கூறி தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

இதில் மனம் உடைந்த கலைச்செல்வி ஊர் பெரியவர்கள் மற்றும் உறவினர்களிடம் பலமுறை முறையிட்டுள்ளார். அவர்கள் சீனிவாசனை அழைத்து பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் வேதனையடைந்த கலைச்செல்வி, மகளுடன் நேற்று முன்தினம் வெளியில் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் தாயையும், மகளையும் காணவில்லை.

இந்த நிலையில், நேற்று காலை உறவினர்கள் அவர்களது தோட்டத்தில் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் பார்த்தனர். அப்போது கலைச்செல்வியின் சேலை தண்ணீரில் மிதப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது தாயும், மகளும் தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் கிணற்றில் இருந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்பத்தகராறில் கலைச்செல்வி மகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 7 ஆண்டுகள் முடிவடையாத நிலையில் கலைச்செல்வி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் ராமமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார். குடும்ப தகராறில் மகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story