சாலைகிராமம் அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம்


சாலைகிராமம் அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 May 2018 11:42 AM IST (Updated: 11 May 2018 11:42 AM IST)
t-max-icont-min-icon

சாலைகிராமம் அருகே முத்தூர் கிராமத்தில் மணல் அள்ளிய லாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளையான்குடி,

இளையான்குடி தாலுகா சாலைகிராமம் அருகே உள்ளது முத்தூர். இந்த கிராமத்தில் அரசு அனுமதியுடன் மணல் குவாரி அமைத்து, காரைக்குடியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக மணல் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அதோடு நிற்காமல் தற்போது மணல் குவாரி செயல்படாத நிலையில் முத்தூர் கிராமத்தில் மேலும் சில இடங்களில் இரவு நேரங்களில் திருட்டுதனமாக மணல் அள்ளப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைவதாக கூறி, மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்துவந்தனர்.

இந்தநிலையில் கிராமமக்கள் ஏராளமானோர் மணல் குவாரி உள்ள இடத்தில் நேற்று அதிகாலை திரண்டனர். பின்னர் அங்கு மணல் அள்ளி கொண்டிருந்த 6 டிப்பர் லாரிகளையும், ஒரு ஜே.சி.பி. எந்திரத்தையும் சிறைபிடித்து, மணல் அள்ளிய குவாரி நிலத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்திய கிராமமக்கள் அங்கேயே காத்திருந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இளையான்குடி தாசில்தார் கண்ணதாசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சாலைகிராமம் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலெக்டர் நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைய மாட்டோம் என்று கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

கிராமமக்கள் சார்பில் குபேந்திரன் என்பவர் கூறும்போது, எங்கள் கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குவாரி அமைத்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. அரசு அனுமதியுடன் மணல் அள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இரவு நேரத்தில் அதிக ஆழத்திற்கு குழி தோண்டி மணல் அள்ளிவிட்டு, பின்னர் மூடிவிடுகின்றனர். தொடர்ந்து மணல் அள்ளுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்றார்.

போராட்டத்தை தொடர்ந்து முதற்கட்டமாக அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 டிப்பர் லாரிகளை தாசில்தார் பறிமுதல் செய்து, சிவகங்கை கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Next Story