பூங்கா அமைக்க எதிர்ப்பு மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்


பூங்கா அமைக்க எதிர்ப்பு மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
x
தினத்தந்தி 11 May 2018 11:49 AM IST (Updated: 11 May 2018 11:49 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் பூங்கா அமைப்பதற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது வடமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவிலுக்குள் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

பின்னர் அவர்கள் பொழுதை கழிக்க இப்பகுதியில் வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து விருந்தினர் மாளிகை வரை உள்ள சங்குமால் கடற்கரையில் பூங்கா அமைப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் மற்றும் சுற்றுலா துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இந்த பகுதியில் தான் சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இதையடுத்து இப்பகுதியில் ரூ.2½ கோடி செலவில் பூங்கா அமைப்பதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டுஉள்ளது. இதனை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் தொழில் செய்து வரும் மீனவர்கள் தாங்கள் கரை திரும்பும் பகுதியாக இருப்பதால் பூங்கா அமைக்கக்கூடாது என்றும், இதனால் தங்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி சங்குமால் கடற்கரையில் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மீன்பிடி தொழிலாளர் சங்க பொறுப்பாளர் கருணாமூர்த்தி தலைமையில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

Next Story