மாவட்ட செய்திகள்

வீடு தேடி வரும் மருந்து கூடை..! + "||" + Drug basket in search of home

வீடு தேடி வரும் மருந்து கூடை..!

வீடு தேடி வரும் மருந்து கூடை..!
ஹைதி நாட்டின் தலைநகர் போர்ட் ஓ பிரின்ஸில் மருந்துகளையும் கூடைகளில் வைத்து வீடு தேடி வந்து விற்பனை செய்கிறார்கள்!
ஹைதியில் மருந்துக் கடைகளைப் பார்ப்பது அரிதானது. அதனால் பெரும்பாலான மக்கள் வீடு தேடி வரும் மருந்துகளையே எளிதாக வாங்கிக்கொள்கிறார்கள். பிளாஸ்டிக் வாளிகளில் எல்லோரையும் எளிதில் கவரும்படி அழகாக மாத்திரைகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள், மருந்து வியாபாரிகள்.


பச்சை மாத்திரைக்கு அடுத்து மஞ்சள், சிவப்பு மாத்திரைக்கு அடுத்து வெள்ளை என்று விதவிதமான மாத்திரைகளை அழகாக அடுக்கி, கட்டி வைத்து விடுவதால், இந்த மருந்துக் கோபுரங்கள் கீழே விழுவதில்லை. இப்படி மருந்துகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். ஆனால் எப்பொழுதாவதுதான் அரசாங்கத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருந்துகளைப் பற்றிய முறையான புரிதலோ, பயிற்சியோ இல்லாத இந்த வியாபாரிகளிடம் கருக்கலைப்பு மாத்திரையிலிருந்து வயாகரா மாத்திரை வரை கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலான மருந்துகள் சீனாவிலிருந்தும், காலாவதியான மருந்துகள் டொமினிகன் குடியரசில் இருந்தும் வாங்கப்படுகின்றன.

“மக்கள் எங்களிடம் எந்த ரகசியத்தையும் மறைப்பதில்லை. தொற்று, அஜீரணம், பாலியல் பிரச்சினைகள் என்று எந்தப் பிரச்சினைக்கும் எங்களிடம் மாத்திரைகள் இருக்கின்றன. அவரவர் பிரச்சினைகளைச் சொல்லி, தேவையான மருந்துகளை வாங்கிக்கொள்கிறார்கள்” என்கிறார் ரெனால்ட் ஜெர்மைன் என்ற மருந்து வியாபாரி.

மருத்துவர் பரிந்துரை இல்லாமல், இப்படி வியாபாரிகளிடம் மருந்துகளை வாங்குவது தவறு என்று தன்னார்வ அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் வியாபாரிகளிடம் மருந்துகளை வாங்குவது எளிதாகவும் செலவு குறைவாகவும் இருப்பதால் மக்கள் இவற்றையே நாடுகிறார்கள்.