மாவட்ட செய்திகள்

மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழக ஆறுகளில் ரூ.1,000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + "||" + Save water in the sea In the Tamil Nadu rivers Rs.1,000 crores will be constructed

மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழக ஆறுகளில் ரூ.1,000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க
தமிழக ஆறுகளில் ரூ.1,000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழகத்தில் உள்ள பெரிய ஆறுகளில் ரூ.1,000 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கோவில்பட்டி,

மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழகத்தில் உள்ள பெரிய ஆறுகளில் ரூ.1,000 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரசபையில் செய்து முடிக்கப்பட்ட 2-வது குடிநீர் குழாய் திட்டம் தொடக்க விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.

விழாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, டாக்டர் சி.விஜயபாஸ்கர், உதயகுமார், மணிகண்டன், பாஸ்கரன், ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வரவேற்று பேசினார்.

முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர், ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கோவில்பட்டி 2-வது குடிநீர் குழாய் திட்டம், ரூ.127 கோடியே 24 லட்சம் மதிப்பில் முடிவடைந்த திட்டப்பணிகள், ரூ.47 கோடியே 79 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 144 கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என மொத்தம் ரூ.256 கோடியே 85 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரத்து 636 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

மக்கள் ஆதரவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மக்களின் நீண்டநாள் கனவான 2-வது குடிநீர் குழாய் திட்டம் தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். இந்த திட்டத்திற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். அவருடைய வழியில் வந்த இந்த அரசு மக்களின் குடிநீர் தேவைக்காக பல புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. இங்கு கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும்போது மாநாடு நடைபெறுவதுபோல் இருக்கிறது. விழாவுக்கு வரும் வழியில் இருபுறமும் பொதுமக்கள் கூடி இருந்து வரவேற்பதை பார்த்தேன். அ.தி.மு.க.வுக்கு எந்த அளவுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டன. அவர் வழியில் வந்த இந்த அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. நீரின்றி அமையாது உலகு. நீரின் தேவையை புரிந்து கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. விவசாய நலனுக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

கூட்டுக்குடிநீர் திட்டம்

1976-ம் ஆண்டு கோவில்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் தண்ணீர் தேவைக்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கோவில்பட்டி நகரசபைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. மக்கள் தொகை அதிகரித்ததால் தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது.

அதனால் கோவில்பட்டிக்கு 2-வது குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது, தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளத்தை இணைக்கும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணி இன்னும் 6 மாதங்களில் நிறைவடையும்.

குடிமராமத்து திட்டம்

பருவகாலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க ஆறுகளை தூர்வாருவதற்காக குடிமராமத்து திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குளங்கள் தூர்வாரப்பட்டன. இதனால் இந்த ஆண்டு பெய்த மழை குடிமராமத்து பணி செய்த குளங்களில் தேங்கி இருக்கிறது.

இந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்திற்காக ரூ.331 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 1,511 ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படுகின்றன. குளங்களை தூர்வாரினால் மழைநீர் குளங்களில் தேங்கும். இதன்மூலம் நிலத்தடி நீர் உயரும். விவசாயம் செழிக்கும். ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்படும்.

தடுப்பணைகள் கட்ட ரூ.1,000 கோடி

தமிழகத்தில் மழை காலங்களில் பெய்யும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுக்க பெரிய ஆறுகளை தேர்வு செய்து தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. முதற்கட்டமாக ரூ.359 கோடியில் தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கு இந்த அரசு எப்போதும் பாதுகாவலனாக இருக்கிறது. உளுந்து பயிர் செய்யும் விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்யும். இதுவரை 205 டன் உளுந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அதுபோல சொட்டுநீர் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வேளாண்மை கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. உணவு தானிய உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடம் வகிக்கிறது. அதே போல் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விலையில்லா ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது.

மானிய விலையில் ஸ்கூட்டர்

கல்விக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 21 சதவீதம் மாணவர்கள் தான் உயர் கல்வி படித்து வந்தனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையால் புதிய கல்வி கொள்கைகள் வகுக்கப்பட்டன. இதன் மூலம் கல்வி தரம் உயர்ந்தது. தற்போது, உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 46.9 சதவீதமாக உயர்ந்து உள்ளது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அனைத்து துறைகளிலும் ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசு பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி வருகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஓர் ஆண்டில் 1 லட்சம் பேருக்கு ஸ்கூட்டர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஸ்கூட்டருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதுவரை 3 லட்சத்து 34 ஆயிரம் பெண்கள் இலவச ஸ்கூட்டர் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பித்த அனைத்து பெண்களுக்கும் இன்னும் 2 ஆண்டுகளில் ஸ்கூட்டர் வழங்கப்படும்.

மருத்துவத்துறையில் இந்த அரசு பல புதிய சாதனைகளை படைத்து உள்ளது. 229 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா கண்ட பொற்கால ஆட்சி தொடருகிறது. தொடர்ந்து நடந்து வருகிறது.

100 ஆண்டுகள் தொடரும்

தற்போது, புதிய புதிய கட்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. நான் கேட்பது எல்லாம் ஒன்றுதான். இதுநாள் வரை இவர்கள் எங்கே போனார்கள். காலம் போன கடைசியில் சில தலைவர்கள் நதி நீர் இணைப்பேன் என்கிறார்கள். இதற்காக ஏற்கனவே ஜெயலலிதா குரல் கொடுத்துவிட்டார். பல்வேறு கட்சிகள் இந்த அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள். அதை பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம். அவர் கூறியது போல் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 100 ஆண்டுகள் தொடரும். அதை யாராலும் அசைக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

வீரவாள் பரிசு

தொடர்ந்து முதல்-அமைச்சருக்கு, அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வீரவாள் பரிசு வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்தனர். பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் சால்வை அணிவித்து பாராட்டினார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆகியோர் உத்தரவின்பேரில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.